கொரோனா - ரித்விகா வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!

தினமலர்  தினமலர்
கொரோனா  ரித்விகா வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!

கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ரித்விகா. அந்த வீடியோவில், 144 தடை உத்தரவு நாடு முழுவதும் வந்துள்ளது. ஆனபோதும் இன்னமும் அதன் சீரியஸ்னஸ் புரியாமல் மக்கள் தெருக்களில், சாலைகளில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கெல்லாம் கொரோனா வைரஸ் வராது என்கிற அசட்டுத் தைரியத்தில் இருக்கிறார்கள். தயவு செய்து அனைவரும் வீட்டிலேயே இருங்கள். நீங்கள் அப்படி செய்வதால் உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு.

100 கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள இந்தியாவில் ஒரு லட்சம் பேரை தனிமையில் வைத்து சிகிச்சை கொடுக்கத்தான் வசதி உள்ளது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களை தனி அறையில் வைத்து மட்டுமே சிகிச்சை கொடுக்க முடியும். அதனால் நீங்கள் வெளியில் சென்று மற்றவர்களிடமிருந்து உங்களுக்கும், உங்களிடமிருந்து மற்றவர்களுக்கும் வைரஸை பரப்பினால் எத்தனை பேரை தனி அறையில் வைத்து சிகிச்சை கொடுக்க முடியும். அதனால்தான் 144 தடை உத்தரவு போட்டுள்ளனர். அந்த சீரியஸ்னஸை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.

4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் மழை வெள்ளம் வந்தபோது 15 நாட்களாக யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. டிவி, செல்போன், மின்சாரம் என எந்த வசதியும் இல்லை. ஆனால் இப்போது அப்படியில்லை. எல்லா வசதிகளும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது வீட்டிலேயே இருக்காமல் ஏன் வீடுகளில் இருக்காமல் வெளியே சுற்றுகிறீர்கள். நீங்கள் வீடுகளில் இருப்பதால் உங்களுக்கு மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தினருக்கும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என அனைவருக்குமே பாதுகாப்பு என்பதை புரிந்துகொள்ளுங்கள் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் நடிகை ரித்விகா.

மூலக்கதை