வங்கிகடன் தவணை தொகை சலுகை காட்டுமாறு கோரிக்கை

தினமலர்  தினமலர்
வங்கிகடன் தவணை தொகை சலுகை காட்டுமாறு கோரிக்கை

புதுடில்லி : நாடு முழுக்க முடக்கப்பட்டுள்ளதால், பல வணிகங்கள், மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, பல தொழில்துறை பிரதிநிதிகள், கடன்களை தாமதமாக திருப்பிச் செலுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதனையடுத்து, வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கிய கடனை தாமதமாக திருப்பி செலுத்துவதை, வங்கிகள் ஏற்றுக்கொள்ள, ரிசர்வ் வங்கி அனுமதிக்கும் என தெரிகிறது.இது குறித்து வங்கித் துறை சார்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சுயதொழில் செய்பவர்கள், சிறு வணிகர்கள் போன்றவர்கள், பல்வேறு தேவைகளுக்காக கடன் வாங்கியிருக்கின்றனர்.

இது போல் தனிநபர்களும், வீடு, கார், வீட்டு உபயோக சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கடன் வாங்கிஇருக்கிறார்கள்.கொரோனா தாக்குதல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், வருமானம் ஈட்டுவதும், கடனுக்கான தவணைத் தொகையை திருப்பிச் செலுத்துவதிலும் சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன.தனிநபர் மற்றும் வணிகங்கள் என, இரு தரப்புகளிலிருந்தும் இது குறித்து கவலையை தெரிவித்து வருகின்றனர்.

எனவே, கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதில் இருக்கும் சிரமங்கள் குறித்து, இந்திய வங்கிகளின் சங்கம் ரிசர்வ் வங்கியிடம் பேசியிருக்கிறது. இத்தகைய விதிவிலக்குகளுக்கு, ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவைப்படும். இப்பிரச்னை குறித்து ரிசர்வ் வங்கியும் ஆலோசித்து வருகிறது. மேலும், அரசும் இது குறித்து ஆலோசித்து வருகிறது.ஏற்கெனவே, வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிப்பது, பிற வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பது உள்ளிட்டவற்றில் சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக, தவணை தொகை செலுத்துவதிலும் சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை