கொரோனாவால் ‘மன்கட்’ ஆகாதீர்கள்! அஷ்வின் அறிவுறுத்தல்

தினகரன்  தினகரன்
கொரோனாவால் ‘மன்கட்’ ஆகாதீர்கள்! அஷ்வின் அறிவுறுத்தல்

ஐபிஎல் தொடரின் கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார் ஆர்.அஷ்வின். அவர் பந்து வீசியபோது கிரீசை விட்டு வெளியே நின்று ரன் எடுக்கத் தயாராக இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை ரன் அவுட் செய்தார். பந்து வீசாமலே ‘மன்கட்’ முறையில் விக்கெட்டை வீழ்த்தியது விமர்சனத்திற்குள்ளானது. ஐசிசி விதிமுறையின்படிதான் செய்தேன் என்று சொன்ன அஷ்வின், ‘அவர் அடிக்கடி கிரீசை விட்டு வெளியே போனதால் வேறு வழியில்லாமல் அவுட் செய்தேன் என்றும் விளக்கினார். விதியை தெரிந்தவர்கள் புரிந்து கொண்டனர். இந்நிலையில் அவரது ரசிகர் ஒருவர், ‘ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்த படத்தை’ இப்போது அஷ்வினுக்கு  அனுப்பியுள்ளார். அதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள அஷ்வின், ‘இது நடந்து ஒராண்டு ஆகிவிட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இந்த சம்பவம் மக்களுக்கு பொருத்தமான நினைவூட்டல். வீட்டிற்கு ‘உள்ளேயே இருங்கள்; பாதுகாப்பாக இருங்கள்’ என்று டிவிட் செய்துள்ளார். ‘கிரீசை விட்டு வெளியே நின்ற ஜோஸ் பட்லர் அவுட் ஆனதைப் போல, வீட்டை விட்டு வெளியே போய் கொரோனாவுக்கு பலியாகாதீர்கள்’ என்று அஸ்வின் நகைச்சுவையோடு  சொல்லியிருப்பதை நெட்டிசன்கள் வெகுவாக ரசித்து வைரலாக்கி வருகின்றனர்.

மூலக்கதை