கொரோனாவால் வெறிச்சோடிய மைதானங்கள்: விரைவில் சகஜநிலை திரும்ப வேண்டும்...நாசர் உசேன் விருப்பம்

தினகரன்  தினகரன்
கொரோனாவால் வெறிச்சோடிய மைதானங்கள்: விரைவில் சகஜநிலை திரும்ப வேண்டும்...நாசர் உசேன் விருப்பம்

லண்டன்: கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டித் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டு மைதானங்கள் வெறிச்சோடிய நிலையில், விரைவில் சகஜநிலை திரும்பி மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என விரும்புவதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் நாசர் உசேன் கூறியுள்ளார். இது குறித்து லண்டனில் அவர் நேற்று கூறியதாவது: தற்போதுள்ள சூழ்நிலையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரமுடியாது என்பது நிதர்சனமான உண்மை. அதை விட அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசர, அவசிய பணிகள் நிறைய இருக்கின்றன. அதே சமயம் விளையாட்டு என்பது ஏராளமானவர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக உள்ளது. அவர்கள் மீண்டும் களமிறங்கும் வகையில் சகஜநிலை திரும்ப வேண்டும் என விரும்புகிறேன்.குறிப்பாக கிரிக்கெட்டில் அதற்கான சூழ்நிலை அமையும்போது... சர்வதேச போட்டிகள், உள்ளூர் டி20 லீக், 100 பந்து கிரிக்கெட் என எந்த தொடர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை தீர்மானித்து அதற்கேற்ப அட்டவணைகளை தயார் செய்ய வேண்டும். இவ்வாறு உசேன் கூறியுள்ளார்.

மூலக்கதை