கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு கூடுதலாக 6,000 நிதி தர வேண்டும்: ப.சிதம்பரம் கோரிக்கை

தினகரன்  தினகரன்
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு கூடுதலாக 6,000 நிதி தர வேண்டும்: ப.சிதம்பரம் கோரிக்கை

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  பிரதமர் நாட்டின் தளபதியாகவும், மக்கள் படை வீரர்களாகவும் இருந்து கொரோனாவை எதிர்க்க வேண்டும். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். பாதிக்கப்படும் ஏழைகளின் வேலை மற்றும் கூலியை உறுதி செய்யும் வகையில் பணமும், உணவும் உடனடியாக கையில் கொடுக்கப்பட வேண்டும். பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரண நிதியை அதிகரித்து 12 ஆயிரமாக வழங்க வேண்டும். நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்களையும் இத்திட்டத்தில் சேர்த்து, 2 தவணைகளில் 12 ஆயிரம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ள கிராமப்புற ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.3000-த்தை செலுத்த வேண்டும். குடும்ப அட்டை வைத்துள்ள நகர்ப்புற ஏழைகளின் உணவுக்காக தலா 10 கிலோ அரிசி அல்லது கோதுமையை இலவசமாக வழங்க வேண்டும். அத்துடன் அவர்களின் வங்கி கணக்கில் 6000 செலுத்த வேண்டும். நலத்திட்ட உதவிகள் பெறாத தெருவோர மக்கள் மற்றும் நலிவுற்றோரை அடையாளம் கண்டு, அவர்களின் வங்கி கணக்கில் 3000 செலுத்த வேண்டும். அனைத்து வரியை செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூன் 30 வரையும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய அனைத்து தவணையை ஜூன் 30 வரையும் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை