ஐய்யய்யோ... எனக்கு கொரோனா இருக்கு...! பொய் தகவல் பரப்பியவர் மீது வழக்கு

தினகரன்  தினகரன்
ஐய்யய்யோ... எனக்கு கொரோனா இருக்கு...! பொய் தகவல் பரப்பியவர் மீது வழக்கு

தானே: தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக வாட்ஸ்அப்பில் பொய்யான தகவலை பரப்பிய நபருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மும்பை அருகே தானேயைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவர், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், ஆனால் தனது உடல்நிலை மோசமடையும் வரை மருத்துவமனையில் சேர தான் விரும்பவில்லை என்றும் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பினார். இது போலீசாரின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து, காசர்வடவ்லி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று அந்த நபரின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து மருத்துவக் குழுவினருடன் சென்றனர்.  பரிசோதனையில் அந்த நபருக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை எனத் தெரியவந்தது. அந்த நபருக்கு எதிராக இ.பி.கோ. 505(பொது இடத்தில் முறைகேடாக நடந்து கொள்ளுதல்) பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை என்றும் காசர்வடவ்லி போலீஸ் நிலையத்தின் சீனியர் இன்ஸ்பெக்டர் கிஷோர் கெய்ர்னார் தெரிவித்தார்.

மூலக்கதை