உத்தர பிரதேசத்தில் பான்மசாலாவுக்கு தடை

தினகரன்  தினகரன்
உத்தர பிரதேசத்தில் பான்மசாலாவுக்கு தடை

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பான்மசாலாவுக்கு தடை விதித்து நேற்று மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டது.  இந்த மாநிலத்தில் ஏராளமான மக்கள் பான்மசாலாவை மென்று, தெருக்களில் `புளிச் புளிச்\' என துப்புவது வழக்கம். இதனால், அந்த இடமே அசுத்தமாவதுடன் பல்வேறு நோய்கள் பரவவும் காரணமாக அமைந்து விடுகிறது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு மனிதர்களின் எச்சிலும் காரணமாக கூறப்படும் நிலையில் பான்மசாலாவுக்கு உத்தரபிரதேச அரசு நேற்று அதிரடியாக தடை விதித்தது. இது தொடர்பாக மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் மினிஸ்தி வெளியிட்டுள்ள உத்தரவில், `உத்தர பிரதேசத்தில் பான்மசாலா தயாரிப்பு, விற்பனை மற்றும் இருப்பு வைக்க தடை விதிக்கப்படுகிறது. அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும்.  பான்மசாலாவை மென்று எச்சிலை பொதுமக்கள் துப்புவதால் கொரோனா பரவும் ஆபத்து இருப்பதால் இதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\' என கூறப்பட்டுள்ளது. இங்கு கடந்த 2013ல் குட்காவுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை