மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட மேலும் 9 பேருக்கு வைரஸ் தொற்று கொரோனாவால் பாதிப்பு 122 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட மேலும் 9 பேருக்கு வைரஸ் தொற்று கொரோனாவால் பாதிப்பு 122 ஆக உயர்வு

மும்பை: மும்பையில் மேலும் 4 பேருக்கும், சாங்கிலி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நாட்டிலேயே இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் வரை மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக இருந்தது. இந்த நிலையில், சாங்கிலி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி ஆகிய 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த குடும்பத்தினர் சமீபநாட்களில் வெளிநாட்டுக்கோ அல்லது இந்தியாவின் வேறு பகுதிகளுக்கோ சென்று வந்தார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.இதேபோன்று நேற்று மும்பையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த 4 பேரும் கஸ்தூர்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆகவும், மகாராஷ்டிராவில் 122 ஆகவும் அதிகரித்துள்ளது.மும்பை மற்றும் புறநகரில் 45, புனே மாவட்டத்தில் 31, சாங்கிலியில் 9, நவி மும்பை, கல்யாணில் தலா 5, நாக்பூர், யவத்மாலில் தலா 4, தானே, வசாய்-விரார், அகமத்நகரில் தலா 3, சத்தாராவில் 2, பன்வெல், உல்லாஸ்நகர், அவுரங்காபாத், ரத்னகிரியில் தலா ஒருவர் என மாநிலம் முழுவதும் மொத்தம் 116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் மகாராஷ்டிராவும், இந்திய நகரங்களை பொறுத்தமட்டில் மும்பையும் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.களையிழந்த மராத்தி புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் குடிபாட்வா என்ற பெயரில் மராத்தி புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். முக்கிய வீதிகள் எங்கும் பாரம்பரிய இசைமேளத்துடன் நடன நிகழ்ச்சிகள், பெண்களின் பைக் பேரணிகள் என குடிபாட்வா கொண்டாடப்படும். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் நேற்று மராத்தி புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. பூ மார்க்கெட்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததாலும் பூஜை பொருட்கள் கிடைக்காததாலும் புத்தாண்டை முன்னிட்டு மராத்தியர்களின் இல்லங்களில் நடத்தப்படும் வழக்கமான பூஜைகளும் நடைபெறவில்லை.வீட்டில் செஸ் விளையாடும் சரத் பவார்ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்துடன் வீட்டில் முழு ஓய்வில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், குடும்பத்தினருடன் செஸ்(சதுரங்கம்) விளையாடி பொழுது போக்கி வருகிறார். குடும்பத்துடன் சரத் பவார் செஸ் விளையாடும் வீடியோவை அவரது மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டார். அதில், ‘‘எனது தந்தையுடன் செஸ் விளையாடுவது கடினமானது. ஆட்டம் தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் என்னையும் எனது மகளையும் தோற்கடித்து விட்டார். நாங்கள் இப்போது புத்தகம் வாசிக்கிறோம், குடும்பத்துடன் பொழுது போக்குகிறோம். நீங்களும் வீட்டிலேயே பாதுகாப்பாக தங்கியிருங்கள்’’ என்று சுப்ரியா சுலே குறிப்பிட்டுள்ளார்.கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட தம்பதி டிஸ்சார்ஜ்மகாராஷ்டிராவில் புனேயில் கொரோனா வைரசால் முதலில் பாதிக்கப்பட்ட கணவன், மனைவி குணமடைந்து நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 14 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு காரணமாக புனே மாநகராட்சிக்கு சொந்தமான நாயுடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இந்த தம்பதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் இவர்களுக்கு மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகடிவ் ரிசல்ட் வந்தது. எனினும் அவர்கள் தொடர்ந்து தனி வார்டில் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட பரிசோதனையிலும் இவர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட்டு விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று அந்த தம்பதியர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மூலக்கதை