கொரோனா முன்னெச்சரிக்கை மோடி கூட்டத்தில் சமூக இடைவெளி

தினகரன்  தினகரன்
கொரோனா முன்னெச்சரிக்கை மோடி கூட்டத்தில் சமூக இடைவெளி

புதுடெல்லி: பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.   கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 14,000 பேர்  பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.  இதையடுத்து, கொரோனா பரவுவதை தடுக்க, பிரதமர் மோடி உத்தரவின்  பேரில் நேற்று  முன்தினம் நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு  உரையாற்றிய பிரதமர் மோடி, `இந்த 21 நாட்களும் பொதுமக்கள் வீட்டை விட்டு  வெளியே வரக்கூடாது. கொரோனா வைரஸ் சங்கிலித் தொடராக பரவுவதை தடுக்க,  ஒருவருக்கு ஒருவர் குறிப்பிட்ட இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்’ என்று  வலியுறுத்தினார். இதை நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் அவர்  பின்பற்றினார்.வழக்கமாக மத்திய அமைச்சரவை கூட்டம் முட்டை வடிவ டேபிள்  போடப்பட்டு அதைச்சுற்றி பிரதமர் மற்றும் அமைச்சர்கள் அமர்ந்து பேசுவார்கள்.  ஆனால், நேற்று பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் உள்ள லோக்கல்யாண்  இல்லத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முறை மாற்றப்பட்டிருந்தது.  பிரதமர் மோடி அமர்ந்திருக்க அவரது இருபக்கங்களிலும் 3 அடி இடைவெளியில்  விடப்பட்டது. முன்னும் பின்னுமாக அமைச்சர்கள் அமர்ந்து ஆலோசனை நடத்தினர்.  பிரதமருக்கு முன்பு ஒரு சிறிய மேஜையும், மற்ற அமைச்சர்களுக்கு பக்கவாட்டில்  சிறு மேஜைகளும் போடப்பட்டு இருந்தன. அவற்றின் மீது ஆவணங்கள்  வைக்கப்பட்டிருந்தன. இந்த கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக  ஆலோசனை நடத்தப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்ற முடிவுகள் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை  அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம்., அலிகாரில் ஏற்பட்டுள்ள  ஜனநெருக்கடியை போக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஜெர்மனி நாட்டுடன் கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அலிகார்- ஹர்த்துவகஞ்ச் இடையே 22 கிமீ நீளத்துக்கு அமைய உள்ள இந்த மேம்பாலம் 5 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்படும்.மற்ற முடிவுகள்: *  ரயில்வேத் துறையில் இந்தியா - ஜெர்மனி இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.* உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்புக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.* இதேபோல், பிரயாக்ராஜின் பழைய கன்டோன்மெண்ட் பகுதியில் உள்ள பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலம், ேகந்திரியா வித்யாலயா பள்ளி கட்ட வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை