ப்ளீஸ்... தனித்து இருங்கள் * கோஹ்லி வேண்டுகோள் | மார்ச் 25, 2020

தினமலர்  தினமலர்
ப்ளீஸ்... தனித்து இருங்கள் * கோஹ்லி வேண்டுகோள் | மார்ச் 25, 2020

புதுடில்லி: ‘‘இது இந்தியாவுக்கு சோதனைக் காலம். தயவு செய்து பிரதமர் மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கை சரியாக கடைப்பிடியுங்கள். கொரோனா பிடியில் இருந்து தப்பிக்க இது ஒன்று தான் வழி,’’ என கேப்டன் கோஹ்லி தெரிவித்தார். 

சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள், தங்களை கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் பலரும் இதை பின்பற்றவில்லை. 

இதனிடையே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டார். 

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தி:

ஒட்டுமொத்த இந்தியாவும் முடக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். ‘ப்ளீஸ்...’  பிரதமர் அறிவிப்பை பின்பற்றுங்கள். சந்தேகத்துக்கு இடமானவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வது, வீடுகளில் தங்கியிருப்பது போன்ற விஷயங்கள் தான் கொரோனா பிடியில் இருந்து தப்பிக்க வழி. 

உண்மையில் இது இந்தியாவுக்கு இக்கட்டான சோதனைக் காலம். தற்போதுள்ள கடினமான சூழ்நிலையை புரிந்து கொண்டு நாம் விழித்துக் கொள்ள வேண்டும். அரசின் அறிவுரைகளை கடைபிடித்து, எல்லோரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். இது எங்களது அன்பான வேண்டுகோள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கங்குலி ‘அட்வைஸ்’

இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர், முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில்,‘‘வரும் 21 நாட்கள் மக்கள் வீடுகளில் தங்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும்,’’ என்றார்.

இந்திய அணி வீரர் லோகேஷ் ராகுல் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘தயவு செய்து எல்லோரும் வீட்டில் இருங்கள், கவனமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்,’ என தெரிவித்துள்ளார். 


நாங்கள் பார்க்கிறோம்

இந்திய அணி துவக்க வீரர் ரோகித் சர்மா வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ எல்லோரும் வீட்டில் தான் இருக்க வேண்டும். நாங்கள் உங்களை எப்போதும் கண்காணிப்போம்,’ என தெரிவித்தார்.

அதிகம் தெரியலை

இந்திய வீரர் ரெய்னா கூறுகையில்,‘‘பலருக்கும் கொரோனா வைரஸ் குறித்து சரியாகத் தெரியவில்லை. தற்போது 21 நாள் ஊரடங்கு வரவேற்கத்தக்கது. இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம். உண்மையில் குடும்பத்துடன் எப்படி நேரம் செலவிடுவது என தற்போது கற்றுக் கொள்ளலாம்,’’ என்றார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனலில் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,‘‘இப்போதுள்ள சூழலில் 2021, ஏப்.,ல் லண்டன் லார்ட்சில் துவங்கும் பைனலை மாற்றுவது குறித்து யோசித்து வருகிறது. இறுதி முடிவு எடுக்கப்படவில்லை,’’ என்றார்.

 

மூலக்கதை