அரிசி வழங்குகிறார் கங்குலி: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டோருக்கு | மார்ச் 25, 2020

தினமலர்  தினமலர்
அரிசி வழங்குகிறார் கங்குலி: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டோருக்கு | மார்ச் 25, 2020

தாகா: பி.சி.சி.ஐ., தலைவர் சவுரவ் கங்குலி, ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள நலிந்த குடும்பங்களுக்கு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அரசி வழங்குகிறார்.

‘கொரோனா’ வைரஸ் தொற்று சீனா, இத்தாலி, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை உலுக்குகிறது. விளையாட்டு போட்டிகள் முடங்கியுள்ளன. நாடு முழுவதும் வரும் ஏப். 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சவுரவ் கங்குலி, ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள நலிந்த குடும்பங்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். இதற்காக இவர், ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அரிசி வழங்க முடிவு செய்துள்ளார்.

பெங்கால் சங்கம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு பெங்கால் கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. சி.ஏ.பி., சார்பில் ரூ. 25 லட்சம், இதன் தலைவர் அவிஷேக் டால்மியா ரூ. 5 லட்சம் என, மொத்தம் ரூ. 30 லட்சம், மேற்குவங்க அரசிடம் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து சி.ஏ.பி., தலைவர் அவிஷேக் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு அவசர நிவாரண நிதியாக ரூ. 30 லட்சம் அளிக்க முடிவு செய்துள்ளோம். இதனை, அரசிடம் எப்படி கொடுப்பது என கேட்டுள்ளோம். மனித குலத்திற்கு ஆதரவான இப்போராட்டத்திற்கு தங்களால் முடிந்த அளவு நிவாரண நிதியளிக்க அனைவரும் முன்வர வேண்டும்,’’ என்றார்.

வங்கதேசம் நிதியுதவி

இதேபோல வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளனர். இவர்கள், தங்களது ஒரு மாத சம்பளத்தில் பாதியை கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) ஒப்பந்தப்பட்டியலில் உள்ள 17 பேர் உட்பட மொத்தம் 27 கிரிக்கெட் வீரர்கள் நிதியுதவி அளிக்கின்றனர்.

இதுகுறித்து வங்கதேச வீரர்கள் ஒருங்கிணைந்து வெளியிட்ட அறிக்கையில், ‘‘கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராடி வருகிறது. வங்கதேசத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள், மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். தவிர, மாத சம்பளத்தில் பாதியை வழங்க முடிவு செய்துள்ளோம். இது, போதுமானதாக இருக்காது. இருப்பினும் எங்களது பங்களிப்பும் இப்போராட்டதிற்கு பயன்பட விரும்புகிறோம்’’ என, தெரிவித்திருந்தனர்.

மூலக்கதை