மனைவியுடன் யோகா...மகளுடன் விளையாட்டு: ஹர்பஜன் மகிழ்ச்சி | மார்ச் 25, 2020

தினமலர்  தினமலர்
மனைவியுடன் யோகா...மகளுடன் விளையாட்டு: ஹர்பஜன் மகிழ்ச்சி | மார்ச் 25, 2020

மும்பை: ‘‘ஊரடங்கு உத்தரவால் கிடைத்துள்ள ஓய்வு நேரத்தை மனைவி, மகளுடன் செலவிடுவதாக,’’ இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் 39. இவர், ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணியில் இடம் பிடித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் சென்னை அணியின் பயிற்சி முகாம் நிறுத்தி வைக்கப்பட்டது. தவிர ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் இவர், தனது மனைவி கீதா மற்றும் மகள் ஹினாயாவுடன் மும்பையில் உள்ள வீட்டில் உள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் கூறியது: நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்க்கை முற்றிலும் மாறுப்பட்டதாக உணர்கிறேன். இந்த நேரத்தில் விளையாட்டு மனதை விட்டு நீண்ட துாரம் சென்றது போல உள்ளது. இப்போது வீட்டில் உள்ள நான், அடிக்கடி கொரோனா வைரஸ் தொற்று குறித்து விஷங்களை படிக்கிறேன். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள முயற்சித்து வருகிறேன். இக்கடினமாக நேரத்தில் மனதில் உற்சாகத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். நேர்மறையான தகவல், உற்சாகத்தை அதிகரிக்கும்.

இந்த ஓய்வு நேரத்தில் தினமும் காலை மனைவியுடன் யோகா செய்கிறேன். மாலை நேரத்தில் வீட்டில் அமர்ந்து சினிமா பார்க்கிறோம். மகளுடன் நீண்ட நேரம் செலவிடுவது மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு ஹர்பஜன் கூறினார்.

மூலக்கதை