ஒரே நாளில் 140 பேர் பலி; 10 ஆயிரம் பேருக்கு பாதிப்பு அமெரிக்காவை ஆட்டிப்படைக்கிறது கொரோனா: உலகளவில் 18,887 பேர் மரணம்

தினகரன்  தினகரன்
ஒரே நாளில் 140 பேர் பலி; 10 ஆயிரம் பேருக்கு பாதிப்பு அமெரிக்காவை ஆட்டிப்படைக்கிறது கொரோனா: உலகளவில் 18,887 பேர் மரணம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் முதல் முறையாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 140 பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஒரே நாளில் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகளவில் இந்த வைரசால் இறந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சர்வதேச அளவில் கொரோனாவின் கோர தாண்டவம் தீவிரம் அடைந்துள்ளது. இத்தாலியில் தொடர்ந்து 4வது நாளாக நேற்றும் 600 பேர் பலியாகினர். இதன் மூலம், இந்நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 6,077 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 63,927 ஆக உள்ளது. அதிக பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடத்திலும், சீனா (3,277 பேர்) 2வது இடத்திலும் உள்ளன.சீனா, இத்தாலியை தொடர்ந்து, அமெரிக்காவில் வைரஸ் தொற்று மிகவும் தீவிரமடைந்துள்ளது. அங்கு முதல் முறையாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 140 பேர் பலியாகி இருப்பது அமெரிக்க மக்களை பீதி அடைய வைத்துள்ளது. அதோடு ஒரே நாளில் 10,000 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அங்கு வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 46,148 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 582 ஆகி உள்ளது. கடந்த 2 நாட்களாக தினந்தோறும் பலி எண்ணிக்கை 100 தாண்டுவதால் அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 514 பேர் பலியாகினர். மொத்த பலி எண்ணிக்கை 2,696 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,000-த்தை எட்டியிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதேபோல் ஈரானில் நேற்று 112 பேர் இறந்த நிலையில் பலி எண்ணிக்கை 1,934 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் 195 நாடுகளுக்கும் பரவிய கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சமாகி புதிய உச்சத்தை நெருங்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி 3.85 லட்சம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 18,887 பேர் பலியாகி உள்ளனர். மருந்துகளை பதுக்கினால் தண்டனை: டிரம்ப் அதிரடிஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மருந்துகளை பதுக்கினால் கடும் தண்டனை விதிக்கும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார். இதன் மூலம், முகக்கவசம், கைகளை சுத்தம் செய்யும் சானிடைசர், முக்கிய மருந்துகள், மருத்துவ உபகரணங்களை யாரும் பதுக்கி விற்கக் கூடாது. அதன் விலையை அதிகரிக்கக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘யாரும் தங்கள் சுய லாபத்திற்காக அமெரிக்க மக்களை பாதிப்படையச் செய்ய அனுமதிக்க மாட்டோம்,’’ என கூறியுள்ளார்.சீனாவின் வுகான் நகரில் ஏப்.8ல் ஊரடங்கு வாபஸ்கொரோனா முதல் முறையாக கடந்தாண்டு டிசம்பரில் சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் வுகான் நகரில் ஒருவருக்கு கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜனவரி 23ம் தேதி வுகான் உட்பட ஹூபெய் மாகாணம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அம்மாகாணமே தனிமைப்படுத்தப்பட்டது. அங்கு வசிக்கும் சுமார் 5 கோடி மக்கள் வீடுகளில் முடங்கினர். தற்போது வுகானில் நிலைமை சீராகி விட்டது. கடந்த 5 நாட்களாக அங்கு புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து 3 மாதத்திற்குப் பிறகு ஊரடங்கு வரும் ஏப்ரல் 8ம் தேதியுடன் விலக்கிக் கொள்ளப்படுவதாக சீன அரசு அறிவித்துள்ளது. அதேபோல், ஹூபெய் மாகாணத்திற்கான பயண தடை இன்று முதல் விலக்கிக் கொள்ளப்படுகிறது. ஹூபெயில் 78 பேருக்கு மீண்டும் கொரோனாசீனாவின் ஹூபெய் மாகாணத்தில் கடந்த 2 வாரமாக புதிதாக வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை மிகவும் குறைந்து வந்த நிலையில் நேற்று 78 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதில், 74 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்றும், வைரஸ் பரவல் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.கர்நாடகாவில் 38 பேர் பாதிப்புகர்நாடகாவில் நேற்று காலை முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. கல்புர்கி மாநகரம், பெங்களூரு ஊரக மாவட்டம் ஆனேகல் நகரம், ஷிவமொக்கா மாநகரின் காந்தி பஜார், பாகல்கோட்டை மாவட்டம், பாதாமி, துமகூரு, மைசூரு, சித்ரதுர்கா, பல்லாரி மாவட்டங்களிலும் சாலையில் பைக்கில் சுற்றித் திரிந்தவர்கள், வர்த்தக நிலையங்களில் கும்பலமாக இருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.மாநிலத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33 ஆக இருந்தது. இதில் பெங்களூருவில் 23, கல்புர்கி-3, மைசூரு மற்றும் சிக்கபள்ளாபுரா மாவட்டங்களில் தலா 2, குடகு, தென்கனரா, தார்வார் மாவட்டங்களில் தலா 1 இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கோலார் மாவட்டத்தில் ஒருவர் உள்பட 5 பேருக்கு வைரஸ் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. மங்களூரு மாநகரில் உள்ள வென்லாக் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில், ஒரு பெண் உள்பட மூன்று பேர் நேற்று அதிகாலை தப்பியோடினர். போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சைபுதுடெல்லி, மார்ச் 25: கொரோனா பாதித்தவர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கான ஆலோசனையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா திட்டத்தை தேசிய சுகாதார ஆணையம் அமல்படுத்தியுள்ளது. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி சமூக பொருளாதார அடிப்படையில் இதன் மூலம் 10.74 கோடிக்கு மேல் ஏழைகள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை ஓராண்டுக்கு பட்டியலில் உள்ள நோய்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் உள்ள பட்டியலில் கொரோனா வைரஸ் சிகிச்சையையும் சேர்க்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளித்தவுடன் கொரோனா பாதித்தவர்கள் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் உள்ள பிரத்ேயாக வார்டில் இலவசமாக சிகிச்சை பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திகார் சிறையிலிருந்து 3,000 கைதிகளை விடுவிக்க முடிவுடெல்லியில் திகார் உள்ளிட்ட சிறைகளில் உள்ள விசாரணை கைதிகளை விடுவிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் 4 வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த விசாரணை நேற்று நடைபெற்ற போது, டெல்லி அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஆஜராகி, ‘சிறைக்கைதிகளில் தகுதியானவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது அல்லது சிறப்பு பரோல் தருவது போன்றவற்றை கடைபிடிக்கலாம்’ என்று தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதுபற்றி டெல்லி சிறைத்துறை இயக்குநர் ஜெனரல் சந்தீப் கோயல் கூறுகையில், ‘‘3,000 கைதிகளை விடுவிக்க  முயற்சிப்போம். கொடூர, ஆபத்தான குற்றவாளிகளுக்கு இந்த சலுகை கிடையாது,’’ என்றார்.

மூலக்கதை