கொரோனா தொற்றில் தப்பிக்க ஒருங்கிணைந்து போராடுவோம்... சோயிப் அக்தர் வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
கொரோனா தொற்றில் தப்பிக்க ஒருங்கிணைந்து போராடுவோம்... சோயிப் அக்தர் வேண்டுகோள்

கராச்சி: கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அனைவரும் சாதி, மதம், பொருளாதார நிலைகளை மறந்து ஒரே சக்தியாக, உலக சக்தியாக இணைந்து செயல்பட வேண்டும் என்று பாகிஸ்தான் அணி முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து சமூக ஊடகம் ஒன்றில்  அவர் பதிவு செய்த காணொளியில் கூறியிருப்பதாவது: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும்  வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா தொற்றை எதிர்த்து போராட நாம் அனைவரும் ஒரே சக்தியாக,  உலக சக்தியாக செயல்பட வேண்டும். அதற்காக சாதி, மதம், பொருளாதார நிலைகளை மறந்து ஒருங்கிணைய வேண்டும். பொருட்களை வாங்கி பதுக்கி வைப்பவர்கள். தினக்கூலிகளை பற்றியும், அவர்களது குடும்பங்களை பற்றியும் சிந்தியுங்கள். பணம் உள்ளவர்கள் வாழ்வார்கள், ஏழைகள் என்ன செய்வார்கள். மக்களை பற்றிச் சிந்தியுங்கள், மனிதர்களாக இருங்கள். இந்து, முஸ்லீம் என்று இருக்காதீர்கள். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருங்கள். வவ்வால், நாய்கள், பூனைகளை எப்படி சீனர்களால் சாப்பிட முடிகிறது என்று புரியவில்லை. அவற்றை சாப்பிட்டுவிட்டு ஏன் உலகத்தில் வைரசை பரப்புகிறீர்கள். எனக்கு கோபம் உள்ளது. ஆனால் சீன மக்களுக்கு நான் எதிரானவன் அல்ல. அவர்கள் பண்பாடு, பழக்க வழக்கங்கள் புரிகிறது. ஆனால் அவை மக்களை கொல்கின்றன. சில கட்டுப்பாடுகள் தேவை. இவ்வாறு அக்தர் கூறியுள்ளார். எல்லோரும் வேறுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக இருந்து கொரோனா தொற்றை தடுக்க வேண்டும் என்ற அக்தரின் கருத்து பல தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் சீனர்களின் உணவு பழக்கவழக்கங்களை அவர் கடுமையாக விமர்சித்து இருப்பதால் பலரின் முகச்சுளிப்புக்கும் ஆளாகி உள்ளார்.

மூலக்கதை