மருத்துவமனையாக மாறுமா ஈடன்: என்ன சொல்கிறார் கங்குலி | மார்ச் 24, 2020

தினமலர்  தினமலர்
மருத்துவமனையாக மாறுமா ஈடன்: என்ன சொல்கிறார் கங்குலி | மார்ச் 24, 2020

கோல்கட்டா: ‘‘மாநில அரசு கேட்டால், கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தை ஒப்படைக்க தயாராக உள்ளோம். இதனை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான தற்காலிக மருத்துவமனையாக மாற்றிக் கொள்ளலாம்,’’என கங்குலி தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 30 மாநிலங்களில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மக்கள் வீடுகளில் தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதனால் கோல்கட்டா நகரம் வெறிச்சோடியது.

மாறிய கோல்கட்டா

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர், முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில்,‘‘எனது கோல்கட்டா நகரம் இப்படி ஒரு நிலைக்கு செல்லும் என ஒருபோதும் நினைத்தது இல்லை. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். இந்த நிலை விரைவில் மாறும். ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி, மகிழ்ச்சியாக இருங்கள். அரசு கேட்டால் கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தை ஒப்படைக்க தயாராக உள்ளோம். இதனை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான தற்காலிக மருத்துவமனையாக மாற்றிக் கொள்ளலாம். இங்குள்ள ஓய்வு அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் பயன்படுத்தலாம். கொரோனா பாதிப்பிற்கு நிதி அளிப்பது தொடர்பாக பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷாவிடம் பேசி முடிவு எடுக்கப்படும்.

ஐ.பி.எல்., நிலை

மார்ச் 29 ல் துவங்க வேண்டிய ஐ.பி.எல்., தொடர் ஏப். 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலை தொடர்கிறது. கடந்த 1௦ நாட்களில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை. இதனால் ஐ.பி.எல்., தொடர் நடக்குமா என்பதற்கு பதில் அளிக்க இயலாது. கிரிக்கெட் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுக்கள் கொரோனா காரணமாக தடைபட்டுள்ளன.

ஐ.பி.எல்., தொடரால் ஏற்படும் இழப்புக்கு உரிமையாளர்களுக்கு இன்சூரன்ஸ் மூலம் ஈடு செய்ய முடியுமா என தெரியவில்லை. அரசு தான் இப்போது அனைத்தையும் முடக்கியுள்ளது. இதற்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்குமா என தெரியவில்லை.

இவ்வாறு கங்குலி கூறினார்.

மூலக்கதை