பி.சி.சி.ஐ., கூட்டம் ரத்து * ரத்தாகிறதா ஐ.பி.எல்., தொடர் | மார்ச் 24, 2020

தினமலர்  தினமலர்
பி.சி.சி.ஐ., கூட்டம் ரத்து * ரத்தாகிறதா ஐ.பி.எல்., தொடர் | மார்ச் 24, 2020

மும்பை: பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.பி.எல்., அணி உரிமையாளர்கள் இடையிலான கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஐ.பி.எல்., தொடர் ரத்தாகும் எனத் தெரிகிறது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் மார்ச் 29ம் தேதி மும்பையில் துவங்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் ஏப். 15ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டது. அடுத்து என்ன செய்வது என முடிவு செய்ய, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), ஐ.பி.எல்., அணி உரிமையாளர்கள் இடையே வீடியோ கான்பெரன்சிங் முறையில் நேற்று கூட்டம் நடக்க இருந்தது.

இதனிடையே வைரஸ் பரவல் அதிகரித்ததை அடுத்து, கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து பஞ்சாப் அணி சக உரிமையாளர் நெஸ் வாடியா கூறியது:

மனித நேயத்துக்குத் தான் முதலில் முக்கியத்துவம் தர வேண்டும். மற்றதெல்லாம் பிறகு தான். கொரோனா சூழலில் முன்னேற்றம் இல்லாத நிலையில் தொடர் குறித்து பேசுவதற்கே அர்த்தம் இல்லை. ஒருவேளை ஐ.பி.எல்., தொடரே நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.

இப்போதைய நிலையில் அதுகுறித்து என்னால் நினைக்கக் கூட முடியவில்லை. மூன்றாவது உலகப் போர் சூழ்நிலையில் இப்போது வாழ்ந்து கொண்டுள்ளோம். மற்ற மக்களுக்கு உதவ நாம் போராடி வருகிறோம்.

எதற்கெடுத்தாலும் நமது அரசை விமர்சித்து வருகிறோம். ஆனால் கொரோனா விஷயத்தில் அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அவர்களை நாம் பாராட்ட வேண்டும். இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் அனைத்த விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதே சிறந்த நடவடிக்கை தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை