புதிய தலைவலி ஆரம்பம் சீனாவில் மீண்டும் ஹண்டா வைரஸ்: எலியிடம் இருந்து பரவி ஒருவர் பலி

தினகரன்  தினகரன்
புதிய தலைவலி ஆரம்பம் சீனாவில் மீண்டும் ஹண்டா வைரஸ்: எலியிடம் இருந்து பரவி ஒருவர் பலி

பீஜிங்: கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் சீனாவில் ‘ஹண்டா’ என்ற வைரஸ் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலியிடம் இருந்து இது மனிதனுக்கு பரவுகிறது.  சீனாவின் வுகான் நகரில் பரவிய கொரோனா வைரசின் தாக்குதல் உலகத்தையை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரசுக்கு உலகம் முழுவதும் 17 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.  கொரோனாவின் பிடியில் இருந்து தப்பிய சீனாவுக்கு, இப்போது புதிய தலைவலி ஆரம்பமாகி இருக்கிறது. இந்நாட்டில் புதிதாக ‘ஹண்டா வைரஸ்’ பரவத் தொடங்கியுள்ளது. ‘ஹண்டா வைரஸ் நுரையீரல் நோய்’ (எச்பிஎஸ்) எனப்படும் இந்த வைரஸ், நுரையீரல் தொடர்பான பிரச்னையை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தும். இது, ஏற்கனவே உள்ள பழைய வைரஸ் தான். எலிகள் மூலம் மனிதர்களுக்கு பரவும். இந்த வைரசால் பல்வேறு நோய்கள் ஏற்படும். இந்நிலையில், நேற்று முன்தினம் சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து சான்டாக் மாகாணத்துக்கு திரும்பும் வழியில் ஹண்டா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி ஒருவர் பலியாகியுள்ளார். அவருடன் பஸ்சில் பயணம் செய்த மற்ற 32 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளதா என மருத்துவ சோதனை நடத்தப்பட்டு வருகிறது.  எலிகளை மட்டும் தாக்கும் இந்த வைரஸ் பிற விலங்குகளை தாக்காது. ஆனால், மனிதர்களை தாக்கும் அபாயம் இருப்பதால் சீனாவில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படும். ஆனால், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவாது.

மூலக்கதை