கொரோனாவால் கல்வி பாதிக்காமல் இருக்க மோட்டார் சைக்கிளில் ‘மொபைல்’ வகுப்பறை: சீன தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு

தினகரன்  தினகரன்
கொரோனாவால் கல்வி பாதிக்காமல் இருக்க மோட்டார் சைக்கிளில் ‘மொபைல்’ வகுப்பறை: சீன தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு

பிஜீங்: கொரோனாவால் மாணவியின் கல்வி பாதிக்கப்பட்டதால், மோட்டார் சைக்கிளில் கரும்பலகையை கட்டிக் கொண்டு ‘மொபைல்’ வகுப்பறை ஏற்பாடு செய்துள்ள சீன தொடக்கப்பள்ளி ஆசிரியரை பலரும் பாராட்டி வருகின்றனர். கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தின் யிச்சூனில் ஒரு தொடக்க பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஹுவாங் ஷெங்கன் (53). இவர், இப்பள்ளியில் 35 ஆண்டுகளாக தொடக்க பள்ளி ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால், மேற்கண்ட பள்ளி இன்னும் திறக்கப்படவில்லை. அதனால், வீட்டில் சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக ஹுவாங், ஷெங் யூஃபெனின் என்ற இடத்திற்கு சென்றார். அங்கு, தன்னிடம் முதல் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், மலை கிராமத்தில் தனது பாட்டியுடன்  வசிக்கும் நிலையை கண்டார். அதையடுத்து, அந்த மாணவிக்கு படிப்பு கற்றுக் கொடுக்க முடிவெடுத்தார். ஏற்கனவே, உள்ளூர் கல்வி அதிகாரிகள் அனைத்து  தொடக்கப்பள்ளி மாணவர்களும் வீட்டில் இருக்கவும் அவர்களுக்கு ஆன்லைனில் கல்வி கற்றுத்தரவும் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால், இந்த சிறுமி வசிக்கும் இடத்தில் நெட் ஒர்க் வசதி இல்லாததால்,  பாடப்புத்தகங்களை வைத்துக் கொண்டு அவரால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த ஆசிரியர் ஹுவாங் ஷெங்கன், நெட்வொர்க் பிரச்னையை தீர்க்க எவ்வளவோ முயன்றார். ஆனால், நிலையான சிக்னல் கிடைப்பது பெரும் சிரமமாக இருந்தது. அதையடுத்து, தனது மோட்டார் சைக்கிளில் மாணவியின் வீட்டுக்கே சென்று வகுப்பு எடுக்க முடிவு செய்தார். அதற்காக, ஒரு சிறிய கரும்பலகையை தனது மோட்டார் சைக்களில் கட்டினார். மேலும், கற்பித்தலுக்கு தேவையான பொருட்களையும் எடுத்துக் கொண்டு அந்த மலை கிராமத்தை நோக்கி சென்றார். ஒருவர் மளிகை கடை திறக்க வருவதாக அப்பகுதிமக்கள் நினைத்தனர். ஆனால், அவர் கடந்த பிப்ரவரி முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் தனது மோட்டார் சைக்கிளில் கரும்பலகையை கட்டிக் கொண்டு, அந்த மாணவியின் வீட்டிலேயே வகுப்பு எடுத்து வந்தார். இந்த ஆசிரியரை சீன மக்கள் ெவகுவாக பாராட்டி வருகின்றனர்.

மூலக்கதை