கொரோனாவுக்கு எதிராக போராட 6 மாச சம்பளத்தை கொடுக்கிறேன்: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனாவுக்கு எதிராக போராட 6 மாச சம்பளத்தை கொடுக்கிறேன்: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவிப்பு

சண்டிகர்: மல்யுத்த போட்டியில் 2019 உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு, இந்திய ரயில்வேயில் சிறப்பு ஓ.எஸ்.டி அதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர், தற்போது தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கூறியதாவது: எனது ஆறு மாத சம்பளத்தை கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்ட நிதியாக வழங்க முடிவு செய்துள்ளேன். ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நாம் கொரோனா வைரசுடன் போராட வேண்டியுள்ளது. உலகம் முழுவதும் நிலைமை இன்னும் மேம்படவில்லை; இப்பிரச்னை இன்னும் 2 முதல் 3 மாதங்கள் தொடர்ந்தால், ஒலிம்பிக்கை ஒத்திவைப்பதுதான் சரியாக  இருக்கும். கொரோனா வைரஸ் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருவதால், பல நாடுகள் தங்கள் விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பும் திட்டத்தை கைவிட்டுவிட்டன. ஏற்கனவே கனடாவும் ஆஸ்திரேலியாவும் தங்கள் விளையாட்டு வீரர்களை அனுப்ப மாட்டோம் என்று கூறியுள்ளன. எனவே இது இந்தியாவின் பிரச்னை மட்டுமல்ல; உலகளாவிய பிரச்னையாக உள்ளதால், தீவிரமாக எதிர்த்து போராட வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பஜ்ரங் புனியா, அரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பயிற்சி பெறுகிறார்; அவரது பயிற்சியாளர் ஷாகோ பெண்டினிடிஸ் ஜார்ஜியாவுக்கு சென்றுவிட்டார். பெண்கள் மல்யுத்த வீரர்களுக்கான இந்தியாவின் வெளிநாட்டு பயிற்சியாளர் ஆண்ட்ரூகுக்கும் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றார்.

மூலக்கதை