189 நாடுகளை சேர்ந்த 100 கோடி மக்கள் வீடுகளில் முடக்கம்; 3 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
189 நாடுகளை சேர்ந்த 100 கோடி மக்கள் வீடுகளில் முடக்கம்; 3 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

* 4,825 பேர் பலி கொண்ட இத்தாலியில் இருந்து 263 மாணவர் மீட்பு
* பலி 6 ஆக உயர்ந்த நிலையில் இன்று நாடு முழுவதும் ‘சுய ஊரடங்கு’

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலால் கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் 189 நாடுகளில் முடங்கி கிடக்கின்றனர். கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது.

தற்போதுவரை 4,825 பேரை பலி கொண்ட இத்தாலியில் இருந்து 263 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 332 பேர் பாதித்த நிலையில், இன்று நாடு முழுவதும் ‘சுய ஊரடங்கு’ கடைபிடிப்பதால் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பரவல் 189 நாடுகளை தொட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி 3,07,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,050 பேர் பலியாகி உள்ளனர்.

நேற்று மட்டும் 32,028 பேர் புதியதாக பாதிக்கப்பட்டும், 1,663 பேர் பலியாகியும் உள்ளனர். அதிகபட்சமாக இத்தாலியில் 4,825 பேர் பலியான நிலையில் நேற்று ஒரே நாளில் 793 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்ததாக கூறப்பட்டாலும், நேற்று 6 பேர் புதியதாக பலியாகியும், 46 பேர் புதியதாக பாதிக்கப்பட்டும் உள்ளனர். பாகிஸ்தானில் 645 பேர் பாதிக்கப்பட்டும், 3 பேர் பலியாகியும் உள்ளனர்.



உலகம் முழுவதும் வைரஸ் பரவி அனைவரையும் அச்சுறுத்தி வரும் நிலையில் சுமார் 100 கோடி மக்கள் வீடுகளில் அடைந்து கிடக்கின்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 332 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

அதில், 17 பேர் இத்தாலி, 3 பேர் பிலிப்பைன்ஸ், 2 பேர் பிரிட்டன், தலா ஒருவர் கனடா, இந்தோனேஷியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த எண்ணிக்கையில், 256 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 23 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டனர்.

நேற்று வரை 4 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை இன்று மேலும் 2 பேர் இறந்ததால் தற்ேபாது 6ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 6 பேரில் டெல்லி, கர்நாடகம், பஞ்சாப்,  பீகார், மகாராஷ்டிரா(2), மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

ேநற்றைய நிலவரப்படி, மொத்தம் 16,021 நபர்களின் 16,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் வாரியாக நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 63 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்தபடியாக கேரளத்தில் 40 பேரும், டெல்லியில் 27 பேரும், உத்தர பிரதேசத்தில் 24 பேரும், தெலங்கானாவில் 21 பேரும், அரியானாவில் 17 பேரும், ராஜஸ்தானில் 17 பேரும், கர்நாடகாவில் 15 பேரும், லடாக்கில் 13 பேரும், பஞ்சாபில் 13 பேரும், குஜராத்தில் 7 பேரும், தமிழகத்தில் 6 பேரும், மத்திய பிரதேசத்தில் 4 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 4 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 3 பேரும், உத்தரகாண்டில் 3 பேரும், மேற்கு வங்கத்தில் 3, இமாசல பிரதேசத்தில் 2 பேரும், ஒடிசாவில் 2 பேரும், புதுச்சேரியில் ஒருவரும், சண்டிகரில் ஒருவரும், சட்டீஸ்கரில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ‘சுய ஊரடங்கு’ உத்தரவை பின்பற்றி உள்ளனர்.

அதாவது, தொடர்ந்து 14 மணி நேரம், இந்தியா தன்னைத்தானே பூட்டிக்கொள்கிறது. டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் ‘சுய ஊரடங்கு’ பின்பற்றப்பட்டது.



விமானம், ரயில், மாநில பேருந்து, கனரக வாகனங்கள், வணிக நிறுவனங்கள், சிறுதொழில்கள் என அனைத்து தரப்பும் ஊரடங்கு உத்தரவை பின்பற்றியதால், மக்கள் அவரவர் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

இந்த ஊரடங்கு உத்தரவு, கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த உதவும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெறும் ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், ‘கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்திற்கு, இன்று நடைபெறும் ஊரடங்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.

இப்போது நாம் எடுக்கும் படிகள், வரவிருக்கும் காலங்களில் உதவும். இன்று வீட்டிற்குள் இருந்து, உங்களின் ஆரோக்கியத்தை பேணுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.     இதேபோல், மத்திய, மாநில அமைச்சர்கள், திரைப்பட பிரபலங்கள் என பலரும் இந்த மக்கள் சுய ஊரடங்கை வலியுறுத்தி இன்று ஊடகங்கள் வாயிலாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில், இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம், கொரோனா அச்சத்தால் சிக்கித் தவித்த 263 இந்திய மாணவர்களை ரோம் நகரிலிருந்து மீட்டது. அவர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் ரோமில் இருந்து நேற்றிரவு இந்தியா புறப்பட்டனர்.

அவர்கள், இன்று காலை 9. 15 மணிக்கு டெல்லி வந்தடைந்தனர். அங்கிருந்து 263 பேரும் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுவரை, சுமார் 1,600 இந்தியர்கள் பிற நாடுகளிலிருந்து இந்தியா திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை