தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு வராததால் பீகாரில் 25,000 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: மாநில கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு வராததால் பீகாரில் 25,000 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: மாநில கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

பாட்னா: பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு வராததால் பீகாரில் 25,000 ஆசிரியர்களை அம்மாநில கல்வித்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

பிப்ரவரி பிற்பகுதியிலிருந்து 75,000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் மதிய உணவு திட்டத்தை நிறுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டது.

இதற்கிடையே, ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 17ம் தேதி முதல் 4. 5 லட்சம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி  ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிப். 25ம் தேதி முதல்  50,000க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களும், அவர்களுடன் சேர்ந்து வேலை நிறுத்த போராட்டம் ெசய்து வருகின்றனர்.கிட்டத்தட்ட 5 லட்சம் ஆசிரியர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்கின்றனர். ஊதிய முரண்பாடு சரிசெய்தல் மற்றும் ஏழாவது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

முன்னதாக, பீகார் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு வாரியத் தேர்வு நடந்தது.
ஆனால், அந்த தேர்வுத் விடைத்தாள்களின் மதிப்பீட்டில்  ஆசிரியர்கள் ஈடுபடவில்லை.

அதனால், தேர்வுத் தாள்கள் மதிப்பீட்டில் பங்கேற்காத 25,000க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்  அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது அரசுப்பணியை செய்ய மறுத்த குற்றத்திற்காக போலீசார் வழக்கு பதிவும் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால், பீகார் மாநில கல்வித்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, பீகார் மாநில மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சத்ருகன் பிரசாத் சிங் கூறுகையில், ‘நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் வரை ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும்.

இதில், எந்த சந்தேகமும் இல்லை. ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறி மக்களை அரசு தவறாக வழிநடத்தி வருகிறது.

உண்மையில் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை’ என்றார். இதுகுறித்து மாநில கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பத்தாம் வகுப்பு வாரியத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களின் மதிப்பீட்டில்  ஆசிரியர்கள் ஈடுபடவில்லை.

மதிப்பீட்டில் பங்கேற்க வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தும், அவர்கள் அந்த உத்தரவை பின்பற்றாததால், பள்ளி ஆசிரியர்கள் மீது எப். ஐ. ஆர் பதிவு செய்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆசிரியர்கள் முன்பு பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும் போதே, தேர்வு மேற்பார்வை கடமையில் இருந்து விலகி இருந்தனர்’ என்றனர்.


.

மூலக்கதை