பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு; கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா : முதல்வர் பினராயி விஜயன் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு; கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா : முதல்வர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் இன்று (நேற்று) மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 6 பேருக்கும், கண்ணூர் மற்றும் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த தலா 3 பேருக்கும் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. காசர்கோட்டில் நோய் உறுதி செய்யப்பட்ட 5 பேர் காசர்கோடு அரசு பொது மருத்துவமனையிலும், ஒருவர் எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கண்ணூர் மாவட்டத்தில் 2 பேர் தலசேரி அரசு மருத்துவமனையிலும், ஒருவர் கண்ணூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல எர்ணாகுளம் மாவட்டத்தில் நோய் உறுதி செய்யப்பட்ட 3 பேரும் எர்ணாகுளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் இதுவரை 53 ஆயிரத்து 13 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

இவர்களில் 52 ஆயிரத்து 785 பேர் வீடுகளிலும், 228 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். நேற்று மட்டும் 70 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு கூறும் அறிவுரைகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு உத்தரவு உள்பட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி வரும். இது நமது சமூகம் முழுவதையும் பாதுகாக்கும் நடவடிக்கை என்பதால் அரசு எதையும் விட்டுக்கொடுக்காது.

வழிபாட்டுத்தலங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். காசர்கோட்டில் சிலர் பொறுப்புணர்வு இல்லாமல் செயல்பட்டதால்தான் அந்த மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அரசின் உத்தரவுகள் மற்றும் அறிவுரைகளை பின்பற்றாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு எஸ்பிக்கள் தவிர வேறு பொறுப்பில் உள்ளவர்களும் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிக உறுப்பினர்கள் உள்ள வீடுகளில் கண்காணிப்பில் உள்ளவர்கள், இதயநோய், புற்றுநோய் மற்றும் எளிதில் நோய் வர வாய்ப்புள்ளவர்கள், வீட்டில் உதவிக்கு ஆட்கள் இல்லாதவர்கள் அரசு ஒதுக்கும் மையங்களுக்கு செல்வது நல்லது.

பொதுமக்களுக்கு தேவையான உணவுப் பொருள் போதுமான அளவு இருப்பு உள்ளது. வியாபாரிகள் வீடுகளுக்கு நேரடியாக பொருட்களை சப்ளை செய்யும் முறையை கொண்டுவர வேண்டும்.

கோலாலம்பூரில் சிக்கியுள்ள 250 மாணவர்களை மீட்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வங்கிகளில் 4 சதவீத வட்டி உள்ள நகைக்கடனை திரும்ப அடைப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும் என மாநில வங்கிகள் துணைக்குழு கேட்டு கொண்டுள்ளது.

கூடுதல் மருத்துவ பரிசோதனை நடத்துவதற்காக 3 மருத்துவ கல்லூரிகளிலுள்ள பரிசோதனை கூடங்களில் ஷிப்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். விரைந்து நோயை கண்டுபிடிக்கும் ரேப்பிங் டெஸ்ட்டுக்கு ஐ. சி. எம். ஆரின் அனுமதி கோரப்படும்.

இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

.

மூலக்கதை