வரலாற்றில் முதல் முறையாக நாகூர் தர்கா மூடல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வரலாற்றில் முதல் முறையாக நாகூர் தர்கா மூடல்

நாகை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 463 ஆண்டுகால வரலாற்றில் நாகூர் தர்கா நேற்று முன்தினம் இரவு முதல் மூடப்பட்டது.
கொரனோ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் பக்தர்களின் வருகையை தற்காலிகமாக நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக கோயில்கள், மசூதிகள், பேராலயங்கள், சந்தைகள் ஆகியவை மூடப்பட்டு வருகிறது.

இதன்படி நாகூரில் உள்ள உலக புகழ் பெற்ற தர்கா நேற்று முன்தினம் இரவு தொழுகைக்கு பின்னர் பக்தர்களின் வருகைக்கு தடை விதித்து தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி அரசின் மறு அறிவிப்பு வரும் வரை நாகூர் தர்காவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

பொதுமக்கள் அனைவரும் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, நாகூர் தர்காவின் பிரதான வாயிலில் ஒட்டப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து தர்காவில் தங்கியிருந்த அனைத்து பக்தர்களும் நேற்று முன்தினம் இரவு தொழுகைக்கு பின்னர் படிப்படியாக வெளியேற்றப்பட்டனர். அரசின் மறு உத்தரவு வரும் வரை தர்கா மூடப்பட்டாலும் தர்கா திறக்கும் நேரமான காலை மற்றும் தர்கா மூடும் நேரமான இரவு ஆகிய நேரங்களில் 1 மணி நேரம் மட்டும் பாரம்பரிய முறைப்படி தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டவர் தர்காவின் 463 ஆண்டுகால வரலாற்றில் பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு கதவுகள் அடைக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று தெரிவித்தனர்.

.

மூலக்கதை