வைரசை அம்பலப்படுத்திய டாக்டரின் மரணத்துக்கு மன்னிப்பு கேட்டது சீனா

தமிழ் முரசு  தமிழ் முரசு
வைரசை அம்பலப்படுத்திய டாக்டரின் மரணத்துக்கு மன்னிப்பு கேட்டது சீனா

பிஜீங்: கொரோனா வைரசை முதன்முதலில் அம்பலப்படுத்திய டாக்டரின் மரணத்துக்கு சீன அரசு மன்னிப்பு கேட்டது. உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்து முதலில் எச்சரிக்கை விடுத்தவர் சீன மருத்துவர் லி வென்லியாங்.

அவர், வூஹானில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதிக்கு முன்பாகவே, சார்ஸ் போன்ற புதிய வைரஸ் சீனாவில் பரவுவதாக தனது நண்பர்களிடமும், சமூக வலைதளங்களிலும் பகிர்ந்திருந்தார். ஆனால், லி வென்லியாங்குக்கு சம்மன் விடுத்த சீன போலீசார், இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்தனர்.

லி வென்லியாங் எச்சரிக்கை விடுத்தது போலவே, கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி ஆயிரக்கணக்கானவர்களை பலி கொண்டு வருகிறது.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த லி வென்லியாங்கும் ஒருகட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை எடுத்துவந்த நிலையில் அவரது உயிரும் பறிபோனது.

தற்போது உலகம் முழுவதும் 2,76,179 பேர் கொரோனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,406 பேர் மரணமடைந்துள்ளனர்.


இந்தநிலையில், கொரோனா வைரஸ் குறித்து முதலில் எச்சரிக்கை விடுத்து, உயிரைப் பறிகொடுத்த மருத்துவர் லி வென்லியாங்கின் குடும்பத்தினரிடம் சீன அரசு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், லி வென்லியாங்கின் குடும்பத்திற்கு நிதி இழப்பீட்டையும் சீன அரசு வழங்கியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

.

மூலக்கதை