186 நாடுகளை சூறையாடி வரும் கொடூர கொரோனா வைரஸ்: 4 நாளில் 1 லட்சம் பேர் பாதிப்பு; 4,883 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
186 நாடுகளை சூறையாடி வரும் கொடூர கொரோனா வைரஸ்: 4 நாளில் 1 லட்சம் பேர் பாதிப்பு; 4,883 பேர் பலி

புதுடெல்லி: 186 நாடுகளை சூறையாடி வரும் கொடூர கொரோனா வைரசால், கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 4,883 பேர் பலியாகியும் உள்ளனர். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்றைய நிலையில் 186 நாடுகளில் வேகமாக பரவி மக்களை கொல்லும் பெரும் கொள்ளை நோயாக மாறியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.

குறிப்பாக, இத்தாலியில் வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் தவிர்த்து பிற பொருட்களுக்கு இத்தாலி அரசு வர்த்தகத் தடை விதித்துள்ளது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் நர்ஸ் ஒருவர் வெளியிட்ட தகவல், அங்குள்ள கொடூரமான சூழலை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. இத்தாலியில் கொரோனா பாதித்த நோயாளிகளை வெறும் எண்களாக மட்டுமே கருதுவதாகவும், மருத்துவமனைகளில் புதிதாக நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்ததும், அடுத்த சில நிமிடங்களில் அவரது படுக்கையை இன்னொருவருக்கு வழங்கப்படுகிறது. 30 நிமிடங்களுக்கு ஒருமுறை சடலங்கள் புதைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சடலங்களை புதைப்பதற்காக சுடுகாடுகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

ஒரே சோக காடாக மாறிய இத்தாலியில், தற்போது கொரோனா பாதிப்பின் இறப்பு எண்ணிக்கையில் சீனாவை விஞ்சியுள்ளது. மருத்துவமனைகளில் தற்போது நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லை என்பது மட்டுமின்றி, தனிப்பட்ட முறையில் எந்த நோயாளிகளிடமும் அக்கறையுடன் எவரும் சிகிச்சை அளிப்பது குறைந்துள்ளதாக இத்தாலிய நர்ஸ் தெரிவித்தார்.

இத்தாலியில் மட்டும் கடந்த 16ம் தேதி கணக்கெடுப்பின்படி, பலி எண்ணிக்கை 1,809 ஆக இருந்த நிலையில், இன்று 4,032 ஆக 4 நாட்களில் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். சர்வதேச அளவில் பார்க்கும்போது 16ம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,69,415 ஆக இருந்த நிலையில், இன்று 2,72,871 ஆக உயர்ந்துள்ளது.

கிடத்திட்ட 1,06,456 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையில் 16ம் தேதி 6,515 ஆக இருந்த நிலையில் இன்றைய நிைலயில் 11,398 ஆக உயர்ந்து 4 நாளில் 4,883 பேர் கூடுதலாக பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் பலி எண்ணிக்கை ஒரே நாளில் 1,367 பேர் ஆக இருந்தது.

அதில் சீனாவில் 7, இத்தாலியில் 627, ஸ்பெயினில் 262, ஈரானில் 149 என்ற நிலையில் உள்ளன. இந்தியாவை பொறுத்தமட்டில் கொரோனா வை‌ரசால் பாதிக்‌கப்பட்டு, கர்நாடகா,‌ டெல்லி, மகாராஷ்டிரா, ‌பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலத்தில் தலா ஒருவர் பலியாகினர்.

இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

நேற்று வரை 14,514 நபர்களிடமிருந்து மொத்தம் 15,404 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த 17 பேர், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மூன்று பேர், இங்கிலாந்தைச் சேர்ந்த இருவர், தலா ஒருவர் கனடா, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

நாடு முழுவதும் சிகிச்சை பெற்றுவந்த 23 பேர் குணமடைந்து வீடு‌ திரும்பிவிட்டதாகவும், நேற்று மட்டும் புதியதாக 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

மருத்து‌வர்களாக இருக்கும் 3‌8 ‌எம்பிக்களுடன் ஆலோசனை‌ நடத்திய நாடாளு‌மன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தங்கள் தொகுதிகளில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளார்.

.

மூலக்கதை