கேரளாவில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா: காசர்கோடு மாவட்டத்துக்கு ‘சீல்’

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளாவில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா: காசர்கோடு மாவட்டத்துக்கு ‘சீல்’

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மீண்டும் பீதி அதிகரித்துள்ளது. மேலும் காசர்கோடு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதன்முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. சீனாவில் இருந்து வந்த 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு அவர்கள் தனி வார்டில் தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்தனர்.

இதன்பிறகு சில வாரங்கள் கழித்து பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த இத்தாலியில் இருந்து திரும்பிய கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் என 3 பேருக்கு ெகாரோனா ெதாற்று ஏற்பட்டது. இவர்களிடம் இருந்து மீண்டும் கேரளாவில் கொரோனா பரவ தொடங்கியது.

நேற்று முன்தினம் வரை 28 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மீண்டும் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதில் காசர்கோடு மாவட்டத்தில் 6 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் மூணாறுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குழுவை சேர்ந்த 5 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

காசர்கோடு மாவட்டத்தில் துபாயில் இருந்து வந்த ஒருவர் மூலம் இந்த நோய் பரவியுள்ளது. இவர் ஊர் திரும்பியபின் கண்காணிப்பில் செல்லாமல் திருமணம், பொதுநிகழ்ச்சிகள், கால்பந்து விளையாட்டு மற்றும் விழாக்களில் கலந்து கொண்டுள்ளார்.

இவர் பங்கெடுத்த திருமணத்தில் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏ நெல்லிக்குந்நு மற்றும் கமர்தீன் ஆகியோரும் இருந்தனர். இவர்கள் 2 பேரும் நேற்று முதல் தாங்களாகவே முன்வந்து வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர்.

காசர்கோடு மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவியதை அடுத்து மாவட்டம் முழுவதும் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒருவாரம் அரசு அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோல அரசு ஊழியர்கள் வெaளியூர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் இன்று (நேற்று) மட்டும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வரை 44 ஆயிரத்து 390 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 44,165 பேர் வீடுகளிலும், 225 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர்.

கண்காணிப்பில் உள்ளவர்கள் சிலர் வெளியேறி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.

இந்த நிலை தொடர்ந்தால் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காசர்கோடு மாவட்டத்தில் மிக மோசமான நிலை உள்ளது.

இந்த மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

ஒரு வாரம் இந்த மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மூடப்படும். 2 வாரங்கள் எல்லா வழிபாட்டு தலங்களும் மூடவேண்டும்.

கிளப்புகள் மூடப்படும். கடைகள் 2 வாரத்திற்கு காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் நாளை (இன்று) முதல் பள்ளிகளுக்கு வரவேண்டாம். வழிபாட்டு தலங்களில் ஆட்கள் சேர்வதை கண்டிப்பாக குறைத்தே ஆகவேண்டும்.

22ம் தேதி மத்திய அரசு அறிவித்துள்ள மக்கள் ஊரடங்கிற்கு கேரளாவும் ஒத்துழைப்பு அளிக்கும். அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படாது.

மெட்ரோ ரயில்கள் நிறுத்தி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

காசர்கோடு மாவட்ட கலெக்டர் சஜித்பாபு கூறியதாவது: துபாயில் இருந்து வந்த வாலிபர் மூலம்தான் காசர்கோடு மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி உள்ளது.

இவரது நடவடிக்கைகளில் மர்மம் உள்ளது. பல விஷயங்களை இவர் மறைத்துள்ளார்.

இவர் ரத்தப்பரிசோதனை செய்த விபரத்தை வெளியே யாரிடமும் கூறவில்லை. மேலும் தனக்கு நோய் இருப்பது தெரிந்தும் பொதுநிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் கலந்துகொண்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. அந்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காசர்கோடு மாவட்டத்தில் அரசின் அறிவுரையை பெரும்பாலானோர் கண்டுகொள்வதில்லை. 2 வாரத்திற்கு கடைகள் திறப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

காசர்கோடு புதிய பஸ் நிலையத்தில் கடைகளை மூட உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனாலும் திறந்திருந்த கடைகளை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

காசர்கோடு மாவட்டத்தையொட்டி கர்நாடக மாநிலம் உள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

அதுபோல கர்நாடகாவில் இருந்தும் எந்த பஸ்சும் காசர்கோடு மாவட்டத்துக்கு இயக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களும் கடும் சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

காசர்கோடு, கண்ணூர் உட்பட வட மாவட்டங்களில் ஏப்ரல் 15 வரை 2,000க்கும் மேற்பட்ட திருமண விருந்து நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் உணவு சப்ளை செய்யும் கேட்டரிங் நிறுவனங்களுக்கு ரூ. 15 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இன்று கேரளாவில்அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் தலைமை செயலகம் உள்பட முக்கிய எந்த அலுவலகங்களும் இயங்கவில்லை.

கேரள உயர்நீதிமன்றத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகள் சிறை

திருவனந்தபுரம் கலெக்டர் கோபாலகிருஷ்ணன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவனந்தபுரம் மாவட்டத்தில் கொரோனா அறிகுறிகளுடன் கண்காணிப்பில் உள்ளவர்கள் வெளியே நடமாடவோ, விதிமுறைகளை மீறவோ கூடாது. அப்படி செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

மாவட்டத்தில் வழிபாட்டுத்தலங்கள், திருவிழாக்கள், மாநாடு உட்பட எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் 50 பேருக்கு மேல் கூடக்கூடாது. மார்ச் 1ம் தேதிக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரும் கண்டிப்பாக 14 அல்லது 28 நாட்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

இதை மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை