கொரோனாவுக்கு எதிராக நாளை மக்கள் ஊரடங்கு: ரயில், பஸ், லாரிகள் ஓடாது

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனாவுக்கு எதிராக நாளை மக்கள் ஊரடங்கு: ரயில், பஸ், லாரிகள் ஓடாது

சென்னை: கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று நாளை பாரத் மக்கள் ஊரடங்கு நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாளை பஸ், ரயில்கள், லாரிகள் ஓடாது.

மதுக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட உள்ளன. அண்டை மாநில எல்லைகள் மூடப்பட்டிருப்பதால் அந்த மாநிலங்களில் இருந்து  இன்று யாரும் தமிழகத்துக்குள் நுழையவில்லை.

இதனால் தமிழகம் தனித்தீவாக மாறி உள்ளது. அதேநேரத்தில் இன்றே பல நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

உலகையே நடுநடுங்க வைத்திருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா முழுவதும் 232 பேருக்கு உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 60 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டது.

மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 52 பேருக்கு இந்த தொற்று உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், நகைக்கடைகள், சுற்றுலா தலங்கள், மதுபான பார் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி அடிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

பல நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வரும் 22ம் தேதி (நாளை) சுய ஊரடங்கை கடைபிடித்து காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நாளை நடைபெற உள்ள மக்கள் ஊரடங்குக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் 7 கோடி பேர் கடைகளை அடைக்க உள்ளனர். டெல்லியில் மட்டும் 15 லட்சம் கடைகள் மூடப்பட உள்ளன.

கடைகள் அடைக்கப்படுவதன் மூலம் 40 கோடி தொழிலாளர்கள் வீடுகளில் இருப்பார்கள். மக்கள் பாரத் பந்த்தாக இது நடைபெற உள்ளது.

இந்நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் விளக்கினார். இதன்பிறகு முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் வாகன போக்குவரத்து தவிர இதர போக்குவரத்திற்காக இன்று முதல் 31. 3. 2020 வரை மூடப்படுகிறது.

இந்த சாலைகளில், பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், காஸ் சிலிண்டர்கள் ஏற்றிவரும் வாகனங்கள், இதர சரக்கு வாகனங்கள், தவிர்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி ஆந்திரா மாநில எல்லையான ஊத்துக்கோட்டை, திருத்தணி, கும்மிடிப்பூண்டி ஆகிய எல்லைகள் சீல் வைக்கப்பட்டன.

நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. டெல்லியில் இருந்து வரும் வாகனங்களும் இந்த வழியாகத்தான் தமிழகம் வரவேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பண்ணாரி சோதனை சாவடியில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்களான மருந்து, பால், பெட்ரோல், டீசல், காய்கறி உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

மற்ற வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் முக்கிய வழித்தடமான வாளையார் சோதனை சாவடி நேற்று மாலை முதல் மூடப்பட்டன.

தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பஸ், லாரி போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை- மூணார் சாலை வழியே கேரளாவை ஒட்டிய தமிழக எல்லைப் பகுதியான 9/6 சோதனை சாவடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிக்காக காவல்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் அரசு பேருந்துகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டு உள்ளன.

கேரள மாநிலத்தில் இருந்து ஒரு சில பேருந்துகள் மட்டும் 9/6 செக்போஸ்ட் வரை இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் குறைந்த அளவு சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வந்தது.

கேரளாவிலிருந்து எல்லைப்பகுதி வழியாக வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை கண்டுபிடித்து அவற்றை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் நேற்று காலை முதல் போலீசார் மற்றும் மருத்துவத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் ஒரு சில வாகனங்களில் வருபவர்களை கண்காணித்து அவர்கள் முக்கிய தேவைகளுக்காக உள்ளுர் பகுதிகளுக்கு வருவதாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் என அடையாளம் காணப்படும் அவர்கள் அங்கேயே திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்கள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இருந்து உடுமலை வரும் பயணிகள் அளவு நாளுக்கு நாள் குறைந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முதல் மாநில எல்லைப்பகுதியில் கேரள வாகனங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரள பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டு உள்ளன.

கேரள மாநிலத்தில் இருந்து ஒரு சில பேருந்துகள் மட்டும் கூடலூர் வரை இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் குறைந்த அளவு சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகின்றது.

குமரி, கேரள பகுதிகளான பனச்சமூடு முதல் கொல்லங்கோடு வரை சுமார் 18 செக்போஸ்ட்டுகள் உள்ளன.

இவற்றை கடந்து பால், பத்திரிகை, மளிகை பொருட்கள் என அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், நோயாளிகள் செல்லும் வாகனங்களை மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. மற்ற வாகனங்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

கேரள எல்லையான இஞ்சிவிளை, ஊரம்பு உள்ளிட்ட பகுதிகளில் கேரள போலீசாரும், கேரள சுகாதாரத்துறை அதிகாரிகளும் முகாமிட்டுள்ளனர். அவர்கள் கேரளாவில் இருந்து குமரிக்கு வரும் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.

கேரள அரசு பஸ்கள் பாறசாலையுடன் நிறுத்தப்படுகின்றன. அவசர தேவைக்கான வாகனங்களை மட்டும் தமிழகத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

குமரி மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான சில பஸ்கள் மட்டும் கேரள பகுதிக்கு சென்று வருகின்றன.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள பாலாற்றில் கொரோனா தடுப்புக்காக தமிழக அரசு சார்பில் புதிய சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச்சாவடி அருகே 2 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சுகாதார பணியாளர்கள் 10 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை, கொல்லேகால், மைசூர் ஆகிய பகுதிகளுக்கு 16 தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த பேருந்துகள் அனைத்தும் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர், சேலம், ஈரோடு பகுதிகளுக்கு வரும் கர்நாடக பேருந்துகளும் நிறுத்தப் பட்டுள்ளன.

அண்டை மாநில எல்லைகள் கிட்டத்தட்ட மூடப்பட்டிருப்பதால் தமிழகம் தனித்தீவாக மாறி உள்ளது.

இந்நிலையில், மோடி அறிவித்தப்படி நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கு நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினி பஸ்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பால் வண்டிகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் உள்பட அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் பெரிய ஜவுளி நிறுவனங்கள், நகை கடைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், நாளை சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து கடைகளும் மூடப்படுகின்றன. லாரிகளும் ஓடாது என்று நாமக்கல்லில் செயல்படும் லாரி சம்மேனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பஸ், ரயில்கள் ஓடாது, அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று நேற்று முன்தினமே அறிவிக்கப்பட்டது.

ஆனால் டாஸ்மாக் கடைகள் பற்றி அரசு எதுவும் கூறாமல் இருந்தது. இந்தநிலையில் டாஸ்மாக் கடைகளும் நாளை மூடப்படும் என தமிழக அரசு இன்று அறிவித்தது.

கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகள், மக்களின் ஆதரவுடன் இந்த ஊரடங்குஉத்தரவு நடைபெற இருப்பதால் தமிழகம் நாளை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி அமைதி பூங்காவாக காட்சி அளிக்க இருக்கிறது.

அதற்கு முன்னோட்டமாக இன்றே சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

.

மூலக்கதை