கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பேரவை கூட்டம் 31ம் தேதியுடன் முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பேரவை கூட்டம் 31ம் தேதியுடன் முடிவு

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் 31ம் தேதியுடன் முடியும் என்று சபாநாயகர் தனபால்  அறிவித்தார். கொரோனா வைரஸ் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை முன் கூட்டியே முடிக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின், “நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கை பிரதமர் அறிவித்துள்ளார். இப்படி கூறிக் கொண்டு சட்டப்பேரவை கூட்டம் மட்டும் நடத்துவது சரியாக இருக்காது.

பேரவை கூட்டத்தை ஒத்தி வைக்கப்பட வேண்டும். எம்எல்ஏக்கள் தொகுதி பக்கம் சென்று, கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட இது வசதியாக இருக்கும்” என்றார்.

இந்நிலையில், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் மற்றும் மூத்த அமைச்சர்கள், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி, திமுக கொறடா சக்கரபாணி, துணை கொறடா பிச்சாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நேற்று சட்டப்பேரவையில் சபாநாயகர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நேற்று மாலை 3. 40 மணிக்கு கூட்டம் முடியும் வரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இன்று பிற்பகல் 12 மணிக்கு சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் முதல்வர், எதிர்கட்சி துணை தலைவர், காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் எடுக்கப்பட்ட முடிவை சபாநாயகர்  தனபால் பேரவையில் அறிவித்தார்.

இதன்படி தமிழக சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 31ம் தேதியுடன் முடிக்கப்படும் என்று சபாநாயகர்  தனபால் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 9ம் தேதியுடன் முடிய வேண்டிய பேரவைக் கூட்டம் 9 நாட்கள் முன்னதாக மார்ச் 31ம் தேதியுடன் முடிக்கப்படுகிறது. இதன்படி காலை, மாலை என்று இரண்டு பிரிவாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும்.

பேரவை நிகழ்ச்சிகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு தொடங்கி பேரவையின் அன்றைய நாள் நிகழ்ச்சிகள் முடிவு பெறும்.

காலையில் ஒரு துறை மீதான மானிய கோரிக்கை மீதும், மாலையில் மற்றொரு துறை மீதான மானிய கோரிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை