உச்சநீதிமன்றத்தில் விடியவிடிய நடந்தது என்ன?

தமிழ் முரசு  தமிழ் முரசு
உச்சநீதிமன்றத்தில் விடியவிடிய நடந்தது என்ன?

புதுடெல்லி: நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5. 30 மணிக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கு நிறைவேற்றப்பட்டதற்கு முன்னதாக, நேற்று மதியம் 2 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதங்கள் நடந்தன. அதன் விபரம் வருமாறு:

நள்ளிரவு 12:13
மரண தண்டனை நிறைவேற்ற தடைகோரிய 3 குற்றவாளிகளின் கோரிக்கையை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

அவர்களின் வேண்டுகோள் தகுதி இல்லாதது என்று ஐகோர்ட் கூறியது.

நள்ளிரவு 12:18
மரணதண்டனையை நிறைவேற்ற திகார் சிறையில் உள்ள அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். அதிகாலை 1. 30 மணியளவில் போலி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மரண தண்டனை குற்றவாளிகளுக்கு அதிகாலை 4 மணிக்கு காலை உணவு வழங்கப்படும் என்று திகார் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நள்ளிரவு 12:30
மரண தண்டனைக்கு தடை விதிக்கக் கோரும் மூன்று குற்றவாளிகளின் வேண்டுகோளை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்னர், அவர்களின் வழக்கறிஞர் ஏ. பி. சிங், “நான் உத்தரவு நகலைப் பெற்றப்பின், உச்சநீதிமன்றத்திற்குச் செல்வேன். பதிவாளரிடம் பேசியுள்ளேன்’’ என்றார்.

நள்ளிரவு 12:56
தூக்கில் தொங்குவதற்கான நேரம் நெருங்கி வருவதால், குற்றவாளிகள் 4 பேரும் அமைதியற்ற நிலையில் இருந்தனர்.

தகவல்களின்படி, முகேஷ் சிங் மற்றும் வினய் சர்மா இரவு உணவு சாப்பிட்டனர். ஆனால் அக்‌ஷய் குமார் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோர் தங்கள் உணவைத் தவிர்த்தனர்.

முகேஷ் சிங்கின் குடும்பத்தினரும் அவரை சிறையில் கடைசியாக சந்தித்தனர். 15 பேர் கொண்ட குழு இந்த நான்கு குற்றவாளிகளையும் 24 மணி நேரம் கண்காணித்தது.

நள்ளிரவு 01:08
நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ. பி. சிங், உச்சநீதிமன்ற பதிவாளரின் இல்லத்தை நோக்கி சென்றார்.

அதிகாலை: 02:12
அதிகாலை 5. 30 மணிக்கு 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட உள்ள நிலையில், நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் வழக்கறிஞர், ஜனாதிபதியின் கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார்.

அதிகாலை 02:41
கொரோனா வைரஸ் அச்சத்தால் உச்சநீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் நுழைவதை நீதிமன்றம் கட்டுப்படுத்தியது.

அதனால், உச்சநீதிமன்ற நுழைவுவாயிலில் வழக்கறிஞர்கள் சிலர் வாயிலில் இருந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால், சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. குற்றவாளி பவன் குப்தாவின் வழக்கறிஞர் ஏ. பி. சிங் உச்ச நீதிமன்ற நுழைவாயிலில் வாக்குவாதம் செய்தார்.

ஏற்கனவே, ஒரு வழக்கிற்கு அதிகபட்சம் 3 என வக்கீல்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால், நான்கு ஜூனியர்களை உள்ளே அழைத்துச் செல்ல ஏ. பி. சிங் வலியுறுத்தினார்.

அதிகாலை 02:43
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்திற்கு வந்தார்.

அதிகாலை 02:49
கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து குற்றவாளி பவன் குப்தாவின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கிறது.

நீதிபதிகள் பானுமதி, பூஷண் மற்றும் போபண்ணா ஆகியோரின் பெஞ்ச் முன் விசாரணை தொடங்கியது.

அதிகாலை 02:50
கொரோனா வைரஸ் பயம் காரணமாக நிர்பயாவின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தின் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை அவர்களின் வழக்கறிஞர்கள் மட்டுேம நீதிமன்றத்துக்குள் சென்றனர்.

அதிகாலை 02:57
நீதிபதி ஜே. பூஷண் குற்றவாளி பவன் குப்தாவின் வழக்கறிஞரிடம், ‘இந்த ஆவணங்கள் ஏற்கனவே நீங்கள் விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் தாக்கல் செய்துள்ளீர். அதே காரணங்களை நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்க முடியுமா? தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய நீங்கள் திறம்பட கேட்கிறீர்கள்.

இறுதியாக கூறப்பட்ட ஒரு தீர்ப்பை மீண்டும் விசாரிக்க முடியாது. எங்களால் மறுபரிசீலனை செய்ய முடியாது.

ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவுக்கு இது அடிப்படையாக இருக்க முடியாது’ என்றார்.

அதிகாலை 03:02
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதற்கு பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘இந்த பிரச்னை மீண்டும் எந்த தகுதி அடிப்படையில் எழுப்பப்படுகிறது.

இந்த மனுவை விசாரணை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளனர். அது தகுதி அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.

சிறப்பு விடுப்பு மனு மற்றும் மறுஆய்வு மனு மீதான கோரிக்கையை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது’ என்றார். இதற்கு நீதிபதி ஜே. பானுமதி, “முதல் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இப்போது இது இரண்டாவது கருணை மனு” என்றார்.

அதிகாலை: 03:08
குற்றவாளி பவன் குப்தாவின் வழக்கறிஞர், காவல்துறை தாக்கல் செய்த வயது ஆவணங்களை சரிபார்த்து, இந்த அறிக்கையில் போலீசார் ஆவணங்களை மறைத்து வைத்துள்ளனர். இதற்கு நீதிபதி பூஷண், ‘இந்த விசாரணையில் நீங்கள் எழுப்பிய வாதங்கள் அனைத்தும் இன்றைய கோரிக்கையுடன் எவ்வாறு பொருந்தும்.

ஏற்கனவே பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. கருணை மனுவை நிராகரிப்பதை நீங்கள் எந்த அடிப்படையில் எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளீர்? ஏற்கனவே வாதிடப்பட்ட காரணங்களை நீங்கள் எழுப்புகிறீர்கள்’ என்றார்.

அதிகாலை 03:15
அதிக வாதங்கள் உள்ளதால் நேரம் மிகக் குறைவாக உள்ளது.

எனவே, அதிக நேரம் தேவைப்படுகிறது. தூக்கிலிட சில மணி நேரங்கள் மட்டுமே இருப்பதால், பவனின் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று குற்றவாளியின் வழக்கறிஞர் ஏ. பி. சிங், நீதிபதிகளிடம் கோரினார்.

அப்போது நீதிபதி பானுமதி, ‘சிறார் உரிமை கோரல் ஏற்கனவே எழுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் சிறார் உரிமை கோர பள்ளி சான்றிதழை நம்பியிருந்தீர்கள்; அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறீர்கள்’ என்றார்.

அதிகாலை 03:17
குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏபி சிங், தனது வாதத்தை முடிக்கிறார்.

மற்றொரு வழக்கறிஞர் குவாஜா. ‘ஜனாதிபதியின் முடிவு நேர்மையான முறையில் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி திறந்த மனதுடன் அல்லது சரியான மனநிலையுடன் இந்த முடிவை எடுக்கவில்லை’ என்றார்.

அதிகாலை 03:28
மரண தண்டனை குற்றவாளி பவன் குப்தா, கடந்த ஆண்டு சிறையில் இருந்த போலீஸ்காரர்களால் சிறையில் தாக்கப்பட்டார் என்று, வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் அவர், இரண்டு அதிகாரிகள் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பவன் குப்தாவின் அறிக்கையை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் (மரணதண்டனை) இரண்டு-மூன்று நாட்கள் தாமதமாக பவன் குப்தாவின் தண்டனையை நிறைவேற்ற கூடாதா? அதனால், பவனின் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்றார்.

அதிகாலை 03:33
கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்ததை எதிர்த்து குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிமன்ற அமர்வு அளித்த உத்தரவில், ‘ஜனாதிபதியின் முடிவை மறுஆய்வு செய்வதற்கான எந்த காரணம் மனுவில் இல்லை. இரண்டாவது கருணை மனு முந்தைய மனுவைப் போலவே மீண்டும் மீண்டும் ஒரே கோரிக்கையை வலியுறுத்துகிறது’ என்றனர்.

அதிகாலை 03:41
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிப்பு மற்றும் மரணதண்டனை வாரண்டுக்கு எதிராக மரண தண்டனை குற்றவாளி பவன் குப்தாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அப்போது நிர்பயாவின் தாயார், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இறுதியாக, இந்த நாட்டின் பெண்கள் மற்றும் மகள்களுக்கும், நிர்பயாவிற்கும் நீதி கிடைத்துள்ளது” என்றார்.

அதிகாலை 03:47
மரண தண்டனை நிறைவேற்றும் முன்னர் 10 நிமிடங்களுக்கு அக்‌ஷய் சிங்கின் குடும்பத்தினர் அவரை சிறையில் சந்திக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் ஆஜரான திகார் சிறை அதிகாரிகளை, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கேட்டுக் கொண்டார்.

ஆனால், சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். விதிமுறையின்படி மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் இந்த கட்டத்தில் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டது.

அதிகாலை 04:18
நிர்பயா குற்றவாளி ஒருவருக்கு நிவாரணம் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்த சிறிது நேரத்திலேயே, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வெளியிட்ட ஒரு அறிக்கையில், “எங்கள் நீதி அமைப்பு மற்றும் நிர்வாக அரசாங்கம் அனைவருக்கும் நீதியை உறுதி செய்துள்ளது.

இந்த உதாரணம் ஒரு வலுவான மற்றும் அழிக்க முடியாததாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

அதிகாலை 04:33
குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னதாக டெல்லியின் திகார் சிறை பூட்டப்பட்டது. விதிமுறையின்படி, சிறைச்சாலையில் உள்ள அனைத்து கைதிகளும் மரணதண்டனை நிறைவேற்றப்படும் நேரத்தில், அவரவர் சிறை அறைகளில் பூட்டப்பட்டனர்.

அதிகாலை 04:44
நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரை தூக்கிலிட வேண்டிய நேரம் நெருங்கியுள்ள நிலையில், டெல்லியின் திகார் சிறைக்கு வெளியே துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டனர்.

அதிகாலை 05:13
4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்போது உறுதியானதால் டெல்லி திகார் சிறைக்கு வெளியே பரபரப்பாக காணப்பட்டது.

அடுத்த சில நிமிடங்களில் தூக்கிலிடப்பட உள்ளனர் என்ற தகவலால் சிறை வளாகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர்.

அதிகாலை 05:31
நிர்பயா பாலியல் குற்றவாளிகள் 4 பேர் ஒரே நேரத்தில் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். சிறை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அதிகாலை 05:40
நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரும் சில நிமிடங்களுக்கு முன்பு டெல்லியின் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

நெறிமுறையின்படி, நான்கு பேரின் உடல்களும் அடுத்த 30 நிமிடங்களுக்கு தொங்கிக்கொண்டே இருக்கும். அதன்பின், அவை ஒரு மருத்துவரால் இறப்பு பரிசோதிக்கப்பட்டு, 4 பேரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படும்.

பின்னர் 4 சடலங்களும் அந்தந்த குடும்பங்களிடம் ஒப்படைக்கப்படும்.

அதிகாலை 05:43
நான்கு நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட சிறிது நேரத்திலேயே பாதிக்கப்பட்ட மாணவி நிர்பயாவின் தாய் ஆஷா தேவி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அவர், தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் தூக்கிலிடப்பட்டதை உறுதி செய்த நீதித்துறை மற்றும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், “நீதி கிடைப்பதற்கு கூடுதல் நேரம் எடுத்திருக்கலாம்; ஆனால் இறுதியாக நீதி வழங்கப்பட்டது” என்றார்.

காலை 06:08
சில நிமிடங்களுக்கு முன்பு, நான்கு நிர்பயா குற்றவாளிகளின் உடல்களை ஒரு மருத்துவர் பரிசோதித்தார். முன்னதாக தூக்கிலிடப்பட்ட குற்றவாளிகளின் இறப்பை உறுதிசெய்ய 30 நிமிடங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.

அதனால், இந்த இறப்பு உறுதி செய்வதற்கான சோதனைகள் முடிந்து, நான்கு பேரும் இறந்துவிட்டதாக ஒரு மருத்துவர் அறிவித்தார்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

.

மூலக்கதை