கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டினாலும் சென்னையில் வாகன நெரிசல் குறையவில்லை: மைதானங்களை மூடியதால் சாலைகளில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டினாலும் சென்னையில் வாகன நெரிசல் குறையவில்லை: மைதானங்களை மூடியதால் சாலைகளில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக அரசு செய்து வரும் விழிப்புணர்வு பொதுமக்களிடம் முறையாக சென்று அடையாததால் சென்னையில் பல இடங்கள் கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது. தொடர் விடுமுறையால் வாலிபர்கள் பலர் சாலைகளில் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.   நாட்டையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் இதுவரை பெண் உட்பட 5 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 190 ேபரை  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் வீட்டை விட்டு யாரும் வெளியேற வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், கடந்த 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலா தலங்கள், சந்தைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. கொரோனா வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் மூலமாகவே நாட்டிற்குள் பரவி உள்ளது.

இதனால் வரும் 22ம் தேதி முதல் இந்தியாவிற்கு வரும் அனைத்து வெளிநாட்டு விமானங்களும் தடை செய்யப்பட்டுள்ளது. அதைபோலவே ரயில்வே நிர்வாகமும் 50 சதவீத அளவிற்கு ரயில் போக்குவரத்தை தடை செய்து உள்ளது.



பிரதமர் மோடி நேற்று நாட்டுமக்களுக்கு உரையாற்றிய போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் ஞாயிற்று கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் உரையாற்றிய பிறகு தமிழகம் முழுவதும் மக்கள் ஒரு வித அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

அப்படி இருந்தாலும் மாநில அரசு கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு செய்யாததால் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. தமிழக அரசு கொரோனா பாதிப்பு குறித்து மக்களிடம் சரியாக தகவலை தெரிவிக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசின் உத்தரவுப்படி கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி என பல மாநிலங்களில் மக்களுக்கு சரியாக தகவலை கூறி கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் பாதிப்பு இல்லை.

பாதிப்பு ஏற்பட்ட நபர்களை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று கூறி வருகின்றனர்.

அதேநேரம், மத்திய அரசு உத்தரவுப்படி பள்ளி,கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாதலங்கள் என அனைத்தும் மூடி உள்ளது.

இதனால் மக்கள் ஒரு வித குழப்பத்துடன் தான் வெளியில் சர்வசாதாரணமாக சுற்றி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் கொரோனா குறித்து வதந்தி பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்று மக்கள் வழக்கம் போல் சுற்றி வருகின்றனர். கடந்த 16ம் தேதி முதல் விளையாட்டு மைதானம், மாநகராட்சி பூங்காக்கள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு இடங்கள் மூடப்பட்டுள்ளது.

இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாலைகளில் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். அதேபோல், மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் அதிகாலை முதலே  ஆயிரக்கணக்கான மக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டனர்.

பலர் சாலைகளில் நடைபயிற்சியில் ஈடுபட்டனர்.

மேலும், சென்னை மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கொரோனா அச்சம் குறித்து மக்கள் இடையே எந்த அச்சமும் இல்லை.

ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மட்டும் கொரோனா விழிப்புணர்வு நடக்கிறது. மற்றப்படி புறநகர் ரயில்நிலையங்கள் மற்றும் எந்த ஒரு விழிப்புணர்வும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறைவாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரயில் சேவைகள் குறைக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் குறையவில்லை. பறக்கும் ரயில் மற்றும் தாம்பரம் டூ கடற்கரை ரயில்கள் அனைத்தும் கூட்ட நெரிசலுடன் தான் செல்கிறது.

மக்களிடம் போதிய விழிப்புணர்வு செய்யப்படாமல் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மட்டும் மூடப்பட்டு வருவதால் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விலை கடந்த இரண்டு நாட்களில் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திரைப்பட நகைச்சுவை காட்சிகள் போல் ‘கொரோனா’ இருக்கு  ஆனால் இல்லை என்று தான் அரசு தரப்பில் கூறப்படுகிறது. கொரோனா  அறிகுறிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் எந்த வித அச்சமின்றி நோயாளிகள் மற்றும்  அவரது  உறவினர்கள் சுற்றி வருகின்றனர்.

அவர்களை தடுக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு பதில் மருத்துவமனையில் இயங்கி வந்த கேன்டீன் மட்டும் மூடப்பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனையில் உள் மற்றும் புற நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உணவுக்காக அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல், ெசன்னை முழுவதும் டீக்கடைகள் மற்றும் ஓட்டல்களில் வழக்கம் போல் கூட்டம் அலைமோதியது.

இதற்கு காரணம் கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு இருந்தாலும், மக்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

.

மூலக்கதை