கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி: இதுவரை 28 பேருக்கு சிகிச்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி: இதுவரை 28 பேருக்கு சிகிச்சை

திருவனந்தபுரம்: கேரளாவில் துபாயில் இருந்து வந்த காசர்கோட்டை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.   கேரளாவில் கொரோனா வைரஸ் பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விமான நிலையங்கள், பஸ், ரயில் நிலையங்கள் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

தொடர்ந்து பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தேவைப்பட்டால் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் தற்போது 31173 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் நேற்று புதியதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தை ேசர்ந்த 47 வயதான இவர் துபாயில் இருந்து கடந்த 11ம் தேதி கோழிக்கோடு வந்தார்.

இங்கிருந்து 12ம் தேதி ரயில் மூலம் காசர்கோட்டுக்கு சென்றார். இவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் 17ம் தேதி காசர்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரது உமிழ்நீர் பரிசோதனை அறிக்கை நேற்று வந்தது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் காசர்கோடு அரசு மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதோடு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளனர்.

இதில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கேரளாவில் மின்சாரம், தண்ணீர் கட்டணம் செலுத்த அபராதம் இல்லாமல் ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் சாதாரண கோப்புகளுக்கு இ-பைல்கள் மட்டும் பயன்படுத்தினால் போதும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.   கொரோனா பீதியால் 31173 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் பெரியவர்களுக்கு தினமும் 60 ரூபாயும், குழந்தைகளுக்கு 45 ரூபாயும் வழங்க மாநில பேரிடர் நிவாரண துறை உத்தரவிட்டுள்ளது.

ஒரு மாதம் இந்த தொகை வழங்கப்படும். கேரளாவில் பள்ளி மாணவர்களுக்கு தினமும் மதிய உணவு, வாரத்தில் 2 நாள் முட்டை, பால் ஆகிய வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மதிய உணவுக்கான அரிசியை வீடுகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா பீதி காரணமாக ரயில், பஸ்களில் பயணிகள் எண்ணிக்ைக வெகுவாக குறைந்துள்ளது.

ஏராளமான ரயில்கள் தினமும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. கேரளாவில் ஏற்கனவே அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் தற்போது 1000க்கும் மேல் சர்வீஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தினமும் ரூ. 2 கோடிக்கு மேல் கூடுதல் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

பிஎஸ்என்எல் இலவச சேவை
கேரளாவில் அரசு மற்றும் பல்வேறு தனியார் துறை ஊழியர்கள் வீடுகளில் இருந்தே பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சாப்டுவர் நிறுவனங்கள் ஊழியர்களின் வீடுகளில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்துள்ளன. பலர் வீடுகளுக்கு இன்டர்நெட் வசதி இல்லை என கூறியுள்ளனர்.

எனவே பிஎஸ்என்எல் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இலவச இன்டர்நெட் வசதி செய்து கொடுக்க முடிவு செய்துள்ளது. புதியதாக இணைப்பு பெறுபவர்களும், ஏற்கனவே இன்டர்நெட் சேவை பயன்படுத்துகிறவர்களும் இதில் பயன்பெறுவர்..

மூலக்கதை