நிர்பயாவுக்கு நீதி கிடைத்தது: 4 பேருக்கு தூக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நிர்பயாவுக்கு நீதி கிடைத்தது: 4 பேருக்கு தூக்கு

* டெல்லி திகார் சிறையில் அதிகாலை நிறைவேற்றம்
* 8 ஆண்டாக நடந்த பலாத்கார கொலை வழக்கு முடிவுக்கு வந்தது

புதுடெல்லி:  8 ஆண்டாக நடந்த டெல்லி நிர்பயா பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5. 30 மணிக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டது. 4 முறை ‘டெத்’ வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் விடிய விடிய நடந்த விசாரணைக்கு பின் அதிரடியாக தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2012ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா (23 வயது பாதிக்கப்பட்ட மாணவிக்கு வைக்கப்பட்ட பொதுவான பெயர்) ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். டெல்லியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிங்கப்பூரில் 13 நாள் உயர் சிகிச்சைக்குப்பின் நிர்பயா பரிதாபமாக உயிரிழந்தார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தால், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்து மேலோங்கியது. இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் ராம்சிங், டெல்லி திகார் சிறையில் 2013ம் ஆண்டு, மார்ச் மாதம் 11ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையை விசாரணை நீதிமன்றம் 2013ம் ஆண்டு செப்டம்பரில் அளித்தது. அதேபோல் மற்றக் குற்றவாளிகளான முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி 4 குற்றவாளிகளும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றவாளிகள் 4 பேரும் தனித்தனியாக தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.



குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா, குற்றச் சம்பவம் நடந்தபோது தான் இளம் சிறுவனாக இருந்தேன் என்று கூறி தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடியானது. மற்றொரு குற்றவாளியான முகேஷ் சிங் தாக்கல் செய்த மற்றொரு மனுவில், ‘கடந்த 2012 டிசம்பர் 16ம் தேதி டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது, நான் அந்த இடத்தில் இல்லை.

ஆதலால் என் தண்டனையை நிறுத்த வேண்டும்’ என்று கூறி தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஏற்கனவே முதல்முறையாக 2020 ஜன.

22ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி விசாரணை நீதிமன்றம் ‘மரண’ (டெத்) தண்டனைக்கான வாரண்ட் பிறப்பித்தது. ஆனால், இந்த வாரண்ட் உத்தரவைத் தள்ளிப்போடும் நோக்கில் கருணை மனு, சீராய்வு மனு என்று பல்வேறு மனுக்கள் 4 குற்றவாளிகள் தரப்பிலும் தனித்தனியாக உச்சநீதிமன்றம், குடியரசு தலைவரிடம் முறையீடு என்று அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்டன.

அதனால், நீதிமன்றம் பிறப்பித்த இறப்பு வாரண்ட் தண்டனையை தள்ளிவைத்தனர். அதன்பின் வழக்குகள், கருணை மனுக்கள் தள்ளுபடியான நிலையில், 2வது முறையாக பிப்.

1ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற விசாரணை நீதிமன்றம் இறப்பு வாரண்ட் பிறப்பித்தது.

அப்போதும் மீண்டும் கருணை மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவைகள் நிராகரிக்கப்பட்டன. அதன்பின் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி விசாரணை நீதிமன்றம் மூன்றாவது முறையாக மரண வாரண்ட் பிறப்பித்தது.

அப்போதும் குற்றவாளிகள் கருணை மனு, சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து தண்டனையை தள்ளி வைக்க உரிமை கோரினர். அவையும் தள்ளுபடியானதால், இறுதியாக மார்ச் 20ம் தேதி (இன்று) அதிகாலை 5. 30 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற 4வது முறையாக ‘டெத்’ வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. நீண்ட சட்டப் போராட்டம் மற்றும் குற்றவாளிகளுக்கான சட்ட வாய்ப்புகள் போன்ற நடைமுறைகள் ஒருவழியாக முடிந்த நிலையில், குற்றவாளிகள் 4 பேரின் அனைத்து சட்ட வாய்ப்புகளான கருணை மனுக்கள் குடியரசு தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டன.

சீராய்வு மனுக்களும், மறுஆய்வு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து தூக்கு தண்டனைக்கு முதல்நாளான நேற்று கூட குற்றவாளிகளில் அக்ஷய் குமார், பவன் குப்தா, முகேஷ் ஆகிய 3 பேரும் டெல்லி விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் அடுத்தடுத்து மனுத்தாக்கல் செய்து தங்களின் தண்டனையை நிறுத்தி வைக்க முயன்றனர்.

ஆனால், அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இறுதி ‘டெத்’ வாரண்டை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மாலை தாக்கல் செய்த மனுவும் இரவு விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் நள்ளிரவு குற்றவாளிகளின் சார்பில் அவர்களின் வழக்கறிஞர் ஏ. பி. சிங் மேல்முறையீடு செய்து தண்டனையை நிறுத்திவைக்கக் கோரினார்.

அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி, ஏ. எஸ். போபண்ணா, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று அதிகாலை 3. 30 மணி அளவில் 20 நிமிடங்கள் வரை விசாரித்து தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்புத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர். அதையடுத்து, 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான நகர்வுகள் தீவிரமாக நடைபெற்றன.

ஏற்கனவே, 2 நாட்களுக்கு முன்பாகவே உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து ‘ஹேங்மேன்’ பவன் ஜல்லாட் திகார் சிறைக்கு வரவழைக்கப்பட்டார்.

அவரும், 4 பேருக்கும் போலி தூக்கு தண்டனை நிறைவேற்றுதல் தொடர்பான நடைமுறைகளை முடித்துக் கொண்டார்.

இதனால், அதிகாலை 5. 30 மணிக்கு தூக்கு தண்டனை, குற்றவாளிகள் 4 பேருக்கும் நிறைவேற்றப்படுவது உறுதியானது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தி முடிக்கப்பட்டன.

இன்று அதிகாலை 5. 30 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டதாக டெல்லி திகார் சிறை நிர்வாகம் அறிவித்தது. கிட்டதிட்ட 8 ஆண்டுகால நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பின், நிர்பயா வழக்கில் நீதி கிடைத்துள்ளதாக அனைத்து தரப்பினரும் இந்த தண்டனையை வரவேற்றுள்ளனர்.

டெல்லியில் நிர்பயாவின் பெற்றோர் இனிப்பு கொடுத்து, நீதி வென்றதாக அறிவித்தனர்.

இந்த தண்டனை நிறைவேற்றம் செய்ததற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை