கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை திருப்பதி, தி.மலை கோயில்களில் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை திருப்பதி, தி.மலை கோயில்களில் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் திருமலையிலும் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அலிபிரி மலைப்பாதை, பாதயாத்திரையாக வரக்கூடிய மலைப்பாதை ஆகிய இரண்டும் மூடப்பட்டுள்ளது. திருமலையில் இன்று (நேற்று) நேரம் ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்களை சுவாமி தரிசனம் செய்துவைத்துவிட்டு அத்துடன் ஒருவாரத்திற்கு தரிசனம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் அன்னதான கூடம், முடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டா உள்ளிட்ட அனைத்து இடங்களும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

ஏழுமலையான் கோயிலை கடந்த 1892ம் ஆண்டு 2 நாட்கள் மட்டும் அப்போதைய கோயில் நிர்வாகத்தினர் மூடியுள்ளனர். அதன்பிறகு தற்போது முதல்முறையாக கோயில் மூடப்படாமல் வழக்கம்போல் சுவாமிக்கு நடைபெறக்கூடிய அனைத்து பூஜைகளையும் அர்ச்சகர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது மட்டும் தற்காலிகமாக முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது. ஆனால் ஏழுமலையானுக்கு தினந்தோறும் நடத்தப்படும் 6 கால பூஜைகள் மட்டும் வழக்கம்போல் நடத்தப்படும்.

ஒரு வாரத்திற்கு பிறகு வைரஸ் பரவுவது எந்த நிலையில் உள்ளதோ அதனை பொறுத்து மேற்கொண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அல்லது நீடிப்பதா என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் வழங்கும் அறிவுரையின்படி செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அறிவிப்பு காரணமாக அலிபிரி மலையடிவாரத்தில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தரிசனம் முடித்த பக்தர்கள் இன்று காலை முதல் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இதேபோல் இன்று அதிகாலை ஏற்கனவே சிறப்பு தரிசன சேவைகளுக்கு பதிவு செய்து காத்திருந்த பக்தர்களை தேவஸ்தானம் அனுமதித்தது. அவர்கள் தரிசனம் முடிந்ததும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

நாளை முதல் பதிவு செய்திருந்தாலும் யாருக்கும் அனுமதி இல்லை. இதனால் இன்று காலை முதல் திருமலை முழுவதும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதேபோல் திருச்சானூர் பத்மாவதி தாயார், கோவிந்தராஜ சுவாமி, கோதண்டராம சுவாமி ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய இன்று முதல் வரும் 31ம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அரசு மருத்துவ ஆலோசனைப்படி உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஆறு கால பூஜைகள் வழக்கம் போல் சிவாச்சாரியார்கள் பின்பற்றுவார்கள் என்று கோயில் இணை ஆணையாளர் ஞானசேகர் தெரிவித்தார். அதன்படி இன்று காலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் கோயில் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் முழுவதும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

.

மூலக்கதை