ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி

புதுடெல்லி: ‘மிகச் சிறந்த வீரர் அவர். ஸ்டெம்புகளுக்கு பின்னால், அவர் அணியின் மிகப் பெரிய சொத்து’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை, முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் புகழ்ந்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்திரை பதித்த இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர், இம்மாத துவக்கத்தில் தனது ஓய்வை அறிவித்தார். இந்தியாவுக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர் அவற்றில் 1944 ரன்களை குவித்துள்ளார்.

இதில் 5 சதங்கள், 11 அரை சதங்களையும் விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சராசரி 34. 11 ரன்கள்.

ஓய்வுக்கு பின்னர் ரிலாக்சாக நேரத்தை செலவு செய்வதாக கூறி வரும் வாசிம் ஜாபர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து, தனது கருத்துக்களை ட்வீட் செய்துள்ளார்.

அதில், ‘தோனி முழு உடல் தகுதியுடனும், நல்ல ஃபார்மிலும் இருந்தால் அவர், ஸ்டெம்புகளுக்கு பின்னால், இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து’ என்று கூறியுள்ளார்.

மேலும் அணியின் சிறந்த விக்கெட் கீப்பராக அவர் செயல்படுவதன் மூலம் கே. எல். ராகுலுக்கு உள்ள நெருக்கடி தவிர்க்கப்படும். அவரும் ஒரு பேட்ஸ்மேனாக மேலும் பிரகாசிப்பார்.

தவிர ரிஷப் பன்ட்டையும் கீப்பராக பயன்படுத்தாமல், அணிக்கு இடது கை ஆட்டக்காரர் தேவை என்றால், அவரையும் பேட்ஸ்மேனாக சேர்த்துக் கொள்ளலாம். இந்த விஷயங்களை எல்லாம் தவிர்த்து, பேட்டிங்கில் லோயர் ஆர்டருக்கு தோனி பலம் சேர்ப்பார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

வாசிம் ஜாபர் உட்பட முன்னாள் வீரர்கள் பலரும் மீண்டும் இந்திய அணியில் தோனி இடம் பெற வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அணித் தேர்வாளர்களும், பிசிசிஐ நிர்வாகிகளும் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகின்றனர்.

அதே வேளையில் தனது ஓய்வு குறித்து தோனியும் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

கடைசியாக தோனி 2019ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்று ஆடினார்.

அதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் ஆடவில்லை. அக்டோபர் 2019-செப்டம்பர் 2020 ஓராண்டுக்கான பிசிசிஐ அறிவித்துள்ள ஒப்பந்த வீரர்கள் பட்டியலிலும் தோனியின் பெயர் இடம் பெறவில்லை.

ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி சார்பில் ஆடவுள்ள தோனி, அதற்காக சென்னையில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். ஆனால் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், தனது சொந்த ஊரான ராஞ்சிக்கே தோனி திரும்பி விட்டார்.

 

.

மூலக்கதை