திருவனந்தபுரம் வந்த விமானத்தில் கொரோனா பாதித்தவருடன் பயணம் செய்த 7 தமிழர்கள்: பெயர் பட்டியலை கேரள அரசு அனுப்பியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவனந்தபுரம் வந்த விமானத்தில் கொரோனா பாதித்தவருடன் பயணம் செய்த 7 தமிழர்கள்: பெயர் பட்டியலை கேரள அரசு அனுப்பியது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவருடன் விமானத்தில் வந்த தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பட்டியலை தமிழக சுகாதாரத்துறைக்கு கேரள அரசு அனுப்பி வைத்துள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா வைரசுக்கு 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 3 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திருவனந்தபுரத்தை சேர்ந்த டாக்டர் உள்பட 24 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வீடுகள், மருத்துவமனைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி கத்தார் நாட்டில் இருந்து திருவனந்தபுரம் வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.இதுகுறித்து திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் கோபாலகிருஷ்ணன் தமிழ்முரசு நிருபரிடம் கூறியது: கடந்த மார்ச் 2ம் தேதி தோகாவில் இருந்து வந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் திருவனந்தபுரம் வந்த பயணிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் விவரம் சேகரிக்கப்பட்டது.

இவர்களுடன் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பயணம் செய்தது ெதரிய வந்தது. கேரளாவை சேர்ந்த அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர்களையும் கண்காணிப்பில் வைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களது பெயர் பட்டியல் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மதுக்கடைகள் மூடப்படாது
கொரோனா வைரஸ் பீதியை தொடர்ந்து மதுக்கடைகள், பார்களை மூட வேண்டும் என காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.

இதில் மதுக்கடை, பார்களை மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மதுக்கடைகளை மூடினால் வேறு விளைவுகள் ஏற்படும் என்பதால் மதுக்கடைகள், பார்களை மூட வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டது.

பார்களில் இருக்கைகளுக்கு இடையே 1. 5 மீட்டர் இடைவெளி ஏற்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதுபோல் மதுக்கடைகளில் 30 பேருக்கு மேல் வரிசையில் நிற்க அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பக்தர்களை குறைக்க முதல்வர் அறிவுறுத்தல்
கொரோனா வைரஸ் பீதியை தொடர்ந்து கோயில்கள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என கேரள அரசு அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் நேற்று கேரளாவில் உள்ள பல்வேறு மத தலைவர்களுடன் முதல்வர் பினராயி விஜயன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது சர்ச், பள்ளிவாசல், கோயில்களில் பிரார்த்தனைகள் மற்றும் கூட்டம் நடத்தும்போது பக்தர்களை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் பள்ளி வாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போதும், சர்ச்சுகளில் ஞாயிறு பிரார்த்தனைகளின் போதும் பக்தர்களை அதிகளவில் திரட்ட வேண்டாம் என கூறினார். அதற்கு மத தலைவர்கள் ஒத்துழைப்பதாக உறுதி அளித்தனர்.

ஸ்டேட் வங்கி சுற்றறிக்கை
பாரத ஸ்டேட் வங்கி அனைத்து கிளைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், வங்கிகளுக்கு ஜலதோஷம், காய்ச்சலுடன் வாடிக்கையாளர்கள் வந்தால் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் டாக்டரை பார்க்க கூற வேண்டும். கதவை எப்போதும் திறந்தே வைத்திருக்க வேண்டும்.

அவசர தேவை இல்லாத பட்சத்தில் வங்கி ஊழியர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து கூட்டங்களையும் காணொளி மூலம் மட்டுமே நடத்த வேண்டும்.

வெளிநாட்டு பயணம் முடித்து வரும் அனைத்து ஊழியர்களும் சுகாதாராத்துறையிடம் சான்றிதழ் வாங்கி வரவேண்டும். ஊழியர்கள் வங்கியின் ஒரு கட்டிடத்தில் இருந்து அடுத்த கட்டிடத்துக்கு செல்ல கூடாது.

பொது வாகனங்களை பயன்படுத்துவதை ஊழியர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


.

மூலக்கதை