நீதிபதி வீட்டில் மயங்கி விழுந்தார்: லஞ்சம் வாங்கி கைதான பெண் பிடிஓ திடீர் சாவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நீதிபதி வீட்டில் மயங்கி விழுந்தார்: லஞ்சம் வாங்கி கைதான பெண் பிடிஓ திடீர் சாவு

கரூர்: லஞ்சம் வாங்கி கைதான பெண் பிடிஓ, நீதிபதி வீட்டில் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். திருப்பூர் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள காதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (37).

இவர் கரூர் மாவட்டம் க. பரமத்தி ஒன்றியம் பவித்திரம் பகுதியில் நிலம் வாங்கி அந்த நிலத்தை 17 வீட்டு மனைகளாக பிரித்துள்ளார். மனைகள் விற்பனை செய்வதற்காக மனைப்பிரிவு ஒப்புதல் பெறுவதற்கு க. பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்திராணி (48) என்பவரை அணுகியுள்ளார்.

அவர் ஒப்புதல் வழங்க ₹34,000 லஞ்சம் கேட்டுள்ளார். ரமேஷ் ₹30,000 தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனாலும் லஞ்சம் தர விரும்பாத ரமேஷ் இதுகுறித்து கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீசாரின் ஆலோசனைப்படி ரமேஷ், ரசாயனம் தடவிய ₹30 ஆயிரத்தை க. பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்திராணியிடம் நேற்று பகல் 12 மணியளவில் கொடுத்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயந்திராணியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடந்தது. பின்னர் அவரை தாந்தோணிமலையில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர்.

அங்கும் அவரிடம் விசாரணை நடந்தது. வீட்டில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

இதையடுத்து மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி மலர்விழி முன்னிலையில் ஆஜர்படுத்த இரவு 10. 45 மணியளவில் கரூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிபதி மலர்விழி வீட்டிற்கு அழைத்து சென்றனர். நீதிபதி வீட்டிற்கு சென்றதும், உடல் நிலை சரியில்லை.

சரியாக மூச்சு விட முடியவில்லை என்று கூறியவாறு ஜெயந்திராணி மயங்கி விழுந்தார். உடனே அவரை கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அதிகாலை 3 மணியளவில் ஜெயந்தி ராணி இறந்தார்.

லஞ்சம் வாங்கி கைதான பெண் அதிகாரி, போலீஸ் காவலில் இருந்த போது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஜெயந்தி ராணி உறவினர்கள் கூறுகையில், ‘‘வீட்டுக்கு சோதனைக்கு அழைத்து சென்ற போதே, ஜெயந்தி ராணி தனக்கு உடல்நிலை சரியில்லை. மூச்சு விட சிரமமாக உள்ளது.

மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் இதை போலீசார் கண்டுகொள்ளவில்லை.

போலீஸ் அலட்சியமாக இருந்ததால் தான் ஜெயந்தி ராணி உயிரிழந்துள்ளார்’’ என்றனர். இறந்த பிடிஓ ெஜயந்திராணியின் கணவர் மதுக்குமார்.

பாஜ பிரமுகர். கரூர் மாவட்ட முன்னாள் தலைவராக இருந்தவர்.

தற்போது அமைப்புசாரா அணி மாநில செயலாளராக உள்ளார்.


.

மூலக்கதை