கொரோனா வைரஸ் பரவலை தடுக்க திருப்பதி ஏழுமலையான் கோயிலும் மூடப்படுமா?... தெப்பக்குளம் மூடல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க திருப்பதி ஏழுமலையான் கோயிலும் மூடப்படுமா?... தெப்பக்குளம் மூடல்

திருமலை: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் மக்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் மக்கள் அதிகளவு கூடும் சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், பெரும்பாலான கோயில்கள் மூடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலும் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஏழுமலையான் கோயில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் கூறியதாவது: தற்போது நாட்டில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் சுப்ரபாதம் முதல் ஏகாந்த சேவை வரை அனைத்து பூஜைகளையும் ஏகாந்தமாக நடத்தி பின்னர் கோயிலை மூடலாம் என ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே நாங்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க உலக நன்மைக்காக வேண்டி வருகிறோம். பக்தர்களும் அவரவர் இல்லத்தில் இருந்தபடி கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க சுவாமியிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என்றார்.

இதன் மூலம் ஏழுமலையான் கோயில் எப்போது வேண்டுமானாலும் மூடப்படும் என தெரிகிறது.

தெப்பக்குளம் மூடல்
ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் தினந்தோறும் பக்தர்கள் புனித நீராடி வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக தெப்பக்குளம் தேவஸ்தான உத்தரவுப்படி நேற்று மூடப்பட்டது.

இதற்கு மாற்றாக குளத்திற்கு அருகில் உள்ள பகுதியில் 18 இடங்களில் ஷவர் மூலமாக தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை பக்தர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு தரிசனங்கள் ரத்து
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது 2 மலைப்பாதையிலும் தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அனைத்து முன்னுரிமை தரிசனங்கள், சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டு, இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் நேரடியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

நேற்று ஒரே நாளில் 28 ஆயிரத்து 716 பக்தர்கள் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்றுமுன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை பக்தர்கள் ₹1. 53 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

மேலும் வழக்கமாக நடைபெறும் அங்கபிரதட்சணம், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம், ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர் செல்லும் தரிசனம் போன்றவற்றை தேவஸ்தானம் நாளை முதல் ரத்து செய்துள்ளது.

இதேபோல் ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ரதீப அலங்கார சேவை, கல்யாண உற்சவம், சகஸ்ர கலசாபிஷேகம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த சேவைகள் அனைத்தும் பக்தர்கள் அனுமதியின்றி ஏகாந்தமாக நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரிகார பூஜைகள் ரத்து
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி சந்திரசேகர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர மாநில அரசு மற்றும் அறநிலையத்துறை ஆணையாளரின் உத்தரவின்பேரில் அனைத்து ஆர்ஜித சேவைகளான ராகு, கேது, சர்ப்ப தோஷ நிவாரண பூஜை, நான்குகால அபிஷேகங்கள், சண்டி ஹோமம், ருத்ர ஹோமம், கல்யாண உற்சவம், சனீஸ்வர சுவாமி அபிஷேகங்கள் ஆகியவற்றை தற்காலிகமாக இன்று முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மேலும் பக்தர்கள் மூலவர் சன்னதிக்குள் அனுமதிக்கப்படாமல் சன்னதியின் நுழைவுவாயிலில் இருந்து தரிசனம் செய்து வைக்கப்படுவார்கள் என்றார்.

.

மூலக்கதை