கவர்னரை விமர்சித்து பேச்சு; நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய முயற்சி: குமரியில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கவர்னரை விமர்சித்து பேச்சு; நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய முயற்சி: குமரியில் பரபரப்பு

குலசேகரம்: புதுச்சேரியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கவர்னரை விமர்சித்து பேசியதாக கூறப்பட்ட புகாரின்பேரில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய போலீசார் வந்ததால் குமரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் விமர்சகராகவும், மேடை பேச்சாளருமாக பிரபலமானவர் நாஞ்சில் சம்பத்.

இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆகும். இவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது புதுச்சேரி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ைவத்தியலிங்கத்தை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அதன்படி கடந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி தவளகுப்பம் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக புதுச்சேரி மாநில உள்துறை செயலாளர் சுந்தரேசன், தவளகுப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பாக 21ம் ேததி நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி தவளகுப்பம் போலீசார் நாஞ்சில் சம்பத்துக்கு சம்மன் அனுப்பினர்.

நேற்று முன் தினம் சம்மனை பெற்று கொண்டவர், தற்போது கொரோனா தாக்கம் இருப்பதால் 21ம் தேதிக்கு பிறகு நேரில் ஆஜராவதாக கடிதம் அனுப்பினார்.

இந்த நிலையில் புதுச்சேரி குப்பம் காவல் நிலையத்தை சேர்ந்த 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 போலீசார் என்று 4 பேர் வாகனத்தில் இன்று காலை சுமார் 7 மணியளவில் திருவட்டாரை அடுத்த மணக்காவிளையில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டுக்கு வந்தனர்.

பின்னர் அவரிடம் கைது செய்வதாக கூறினர். உடனே 21ம் தேதி வரை நேரில் ஆஜராவதற்கு  அவகாசம் கேட்டு கடிதம் கொடுத்துள்ளேன்.

ஆகவே 2 நாளுக்கு முன்னதாக வந்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இதுதொடர்பாக நான் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கிடையே தகவல் அறிந்த பத்திரிகையாளர்கள், பொது மக்கள் நாஞ்சில் சம்பத் வீடு முன்பு திரண்டனர். உளவு பிரிவு போலீசாரும் வந்தனர்.

நாகர்கோவில் நகர திமுக செயலாளர் வக்கீல் மகேஷ், மேற்கு மாவட்ட துணை செயலாளர் ஜாண்கிறிஸ்டோபர் உள்ளிட்டோரும் வந்தனர். அவர்களுடன் வக்கீல்கள் சிலரும் வந்தனர்.

நாஞ்சில் சம்பத் அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் புதுச்சேரி போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர்.

அப்போது திமுக வக்கீல்கள் போலீசாரிடம், காவல் நிலையத்தில் ஆஜராவதற்கு சம்மன் அனுப்பி விட்டு அதற்கு முன்பு கைது செய்ய முடியாது என்று வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அங்கு வந்த திருவட்டார் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் புதுச்சேரி போலீசார் அனுப்பிய சம்மனை வாங்கி படித்துவிட்டு இந்த சம்மன் இருப்பதால் கைது செய்ய முடியாது.

21ம் தேதி நேரில் ஆஜராவதற்கு எழுத்து மூலம் உறுதிமொழி வாங்கி செல்லுங்கள் என்றார். அதன்படி 21ம் தேதி ஆஜராவதாக நாஞ்சில் சம்பத் எழுதி கொடுத்தார்.

இதையடுத்து புதுச்சேரி போலீசார் திரும்பி சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

.

மூலக்கதை