சென்னை வெளிவட்ட சாலையில் கார் தீப்பிடித்து எரிந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னை வெளிவட்ட சாலையில் கார் தீப்பிடித்து எரிந்தது

பட்டாபிராம்: சென்னை வண்டலூர், மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. சென்னை கீழ்ப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அபிநரசிம்மன் (54).

இவர், ஆவடி அருகே பட்டாபிராம், ஐஏஎப் சாலையில் சினிமா துறை சம்பந்தப்பட்ட அலுவலகம் நடத்தி வருகிறார். நேற்று மதியம் வீட்டில் இருந்து காரில் அலுவலகத்துக்கு சென்றார்.

பட்டாபிராம் அருகே ராமாபுரம் பகுதியில், வண்டலூர்-நெமிலிச்சேரி 400 அடி வெளிவட்ட சாலையில் வந்தபோது அவரது காரின் இன்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வந்ததால் காரை நிறுத்த முயன்றார்.

ஆனால் அதற்குள் கார் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்ததால் அபிநரசிம்மன் காரில் இருந்து இறங்கி தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூந்தமல்லி தீயணைப்பு படையினர் விரைந்துவந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

இதுபற்றி பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் எரிந்ததற்கான காரணம் பற்றி விசாரிக்கின்றனர்.


.

மூலக்கதை