திருப்பூர் அருகே இன்று காலை விபத்து: 4 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் பலி; 3 மாணவர்கள் படுகாயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்பூர் அருகே இன்று காலை விபத்து: 4 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் பலி; 3 மாணவர்கள் படுகாயம்

அவிநாசி: திருப்பூர் அடுத்த அவிநாசி அருகே இன்று காலை லாரி மீது கார் மோதியதில், காரில் இருந்த 4 மாணவர்கள் மற்றும் கார் டிரைவர் என 5 பேர் பலியாகினர். இவ்விபத்தில் 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

சேலம் விநாயக மிஷின் மருத்துவக்கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டதையடுத்து, அங்கு படிக்கும் மாணவர்கள் 7 பேர் சுற்றுலாவாக ஊட்டிக்கு இன்று அதிகாலை 3 மணியளவில் வாடகை காரில் கிளம்பினர். காரை டிரைவர் மணிகண்டன் ஓட்டி வந்தார்.

கார் இன்று காலை 6 மணியளவில் அவிநாசி - கோவை 6 வழிச்சாலையில் பழங்கரை நல்லிகவுண்டன்பாளையம் பிரிவு அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த சிமென்ட் லோடு ஏற்றிய லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது.

இதில் கார் பலத்த சேதமடைந்து, காரிலிருந்த டிரைவர் மற்றும் மாணவர்கள் ஆகிய அனைவரும் படுகாயமடைந்து, இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டனர்.
விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அப்பகுதியினர் காரில் இருந்து 8 பேரையும் மீட்டனர்.

இதில் பயோ மெடிக்கல் படிக்கும் 3ம் ஆண்டு மாணவர்கள் விழுப்புரம் ஆலத்துரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ்குமார்(21), சேலம் சீரகபாடியை சேர்ந்த வாசுதேவன் மகன் இளவரசன் (21), விழுப்புரம் எடுத்தனூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வெங்கடாசலம் (22), நர்சிங் கல்லூரி மாணவர் வசந்த் (21) மற்றும் காரை ஓட்டி வந்த டிரைவர் மணிகண்டன் (28) ஆகிய 5 பேர் அதே இடத்தில் இறந்தனர்.

இதில் படுகாயமடைந்த மாணவர்கள் பொன்னகரத்தைச் சேர்ந்த சந்தோஷ் (22) மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் அவிநாசி அருகே பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், மற்றொரு மாணவர் கார்த்திக் கோவை மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்..

மூலக்கதை