கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு; சிறுதொழில்களுக்கு சலுகைகள் வழங்கவேண்டும்... மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு; சிறுதொழில்களுக்கு சலுகைகள் வழங்கவேண்டும்... மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தின்போது (ஜீரோ அவர்) எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசியதாவது: கொரோனா வைரஸ் வந்து நாட்டையே புரட்டி போட்டுள்ளது. தங்கள் கடைகளை வியாபாரிகள் அடைக்கும் நிலை உள்ளது.

ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. முட்டை வியாபாரம் அடியோடு முடங்கியுள்ளது.

அனைத்து சாலைகளும் காலியாக உள்ளன. இங்கு மூடப்படாமல் இருப்பது சட்டமன்றமும் டாஸ்மாக் மதுபான கடைகளும்தான்.

கூலிவேலை செய்யும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வேலை செய்தால்தான், ஒரு நாளைக்கு ₹500 கூலி கிடைக்கும்.

இவர்களுக்கு அரசு ஏதாவது உதவி செய்யுமா? இம்மாத இறுதிக்குள் வியாபாரிகள் டாக்ஸ் கட்ட வேண்டும். இச்சூழ்நிலையில் அவர்கள் வரி கட்ட முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே, அவர்களுக்கு வரி கட்ட மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றார். எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின்: கொரோனா வைரஸ் காரணமாக சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

வேலையிழப்பு, தொழில் இழப்பு, வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் பொருளாதார எமர்ஜென்சி அறிவித்துள்ளனர்.



அங்கு சிறுதொழிலுக்கு ரொக்க மானியம் வழங்குகின்றனர். வரி, வாடகை, மின் கட்டணம் உள்ளிட்டவை வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் இத்தாலி நாட்டில் சிறுதொழிலாளர்களுக்கு கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு நாடுகள் சலுகைகளை அறிவித்துள்ளன.

நமது நாட்டின் ஒடிசா மாநிலத்தில்கூட புதிய உத்தி கடைப்பிடிக்கப்படுகிறது. வெளிநாடு சென்று ஒடிசா திரும்புபவர்களை 15 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கின்றனர்.

இதுபோன்று தமிழக அரசும், பொருளாதார நெருக்கடி, பொது சுகாதார விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி: உலகளவில் முதலாவது பாதிக்கப்பட்ட நாடுகளில் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் அதிகளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறு வணிகம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

அவர்களுக்கு வரி செலுத்த கால அவகாசம் வழங்க கோரிக்கை விடப்பட்டது.

இதுகுறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்தான் முடிவு செய்ய முடியும்.

முதல்வரின் அறிவுரைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்: கோழி முட்டைகள் தேக்கமடைந்துள்ளது.

தமிழக அரசு எடுத்துள்ள விழிப்புணர்வு நடவடிக்கை காரணமாக, கோழிகளின் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் சிறுதொழில்கள் மூடப்படவில்லை.

இதுபற்றி அச்ச உணர்வு தேவையில்லை. எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இத்தாலியில் அதிகளவு கொரோனா வைரஸ் பரவிவிட்டது.

ஆனால், நமக்கு அதுபோன்ற ஒரு நிைல இல்லை.

.

மூலக்கதை