கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக புதிய செயலி, குறும்படம் இன்று மாலை வெளியீடு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக புதிய செயலி, குறும்படம் இன்று மாலை வெளியீடு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தண்டையார்பேட்டை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 31 படுக்கை வசதி கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ குழுவினர் முழு ஈடுபாட்டுடன் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். பதட்டம், சந்தேகத்தில் வரும் நபர்களுக்கு உதவி மையங்கள் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளை அணுகுபவர்களுக்கு தேவைப்பட்டால் மாதிரி எடுக்கப்படும். அனைத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி, அவர்களது சந்தேகங்களை தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வுக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

தெர்மல் ஸ்கேனர் விலையை உயர்த்தி விற்ற தனியார் நிறுவனத்தை சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும்.

விமான நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் பரிசோதிக்கப்படும் நபர்களின் விவரங்கள் டுவிட்டர் மூலமாகவும் நேரடியாகவும் சுகாதார துறை வெளியிட்டு வருகிறது. டெல்லியில் இருந்து ரயில் மூலம் வந்த 20 வயது இளைஞருடன் தொடர்பில் இருந்த 10 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளோம்.

மேலும், யார் யார் தொடர்பில் இருந்தனர் என்பதை கண்டறிய முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஏற்கனவே கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட நபர் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டார்.

அவருக்கு தற்போது எந்தவித பாதிப்பும் இல்லை. தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சூழலுக்கு ஏற்றார்போல் தேவையான நடவடிக்கைகளை சுகாதார துறை தீவிரப்படுத்தி வருகிறது.

சுகாதார துறை, மக்களின் நலன் கருதியே தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதார துறை சார்பில் புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளோம்.

குறும்படம் ஒன்றையும் தயாரித்துள்ளோம். இன்று மாலை வெளியிடப்படும்.

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே சானிடைசர்கள் பயன்படுத்துவது அவசியம். மீதமுள்ளவர்கள் சாதாரண சோப் பயன்படுத்தி கைகழுவினால் போதுமானது என்பதை வல்லுனர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

வடமாநில நபர்கள் அதிகம் வந்து தங்கியுள்ள பகுதிகளை தொடர்ந்து சுகாதார துறை கண்காணித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை