கொரோனா வைரசை கட்டுப்படுத்த இரவில் மருந்து தூவுராங்க... வெளியே வராதீங்க..! பெங்களூருவில் வேகமாக பரவும் வதந்தியால் பீதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா வைரசை கட்டுப்படுத்த இரவில் மருந்து தூவுராங்க... வெளியே வராதீங்க..! பெங்களூருவில் வேகமாக பரவும் வதந்தியால் பீதி

பெங்களூரு: பெங்களூரு நகரில் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக வானத்தில் இருந்து மருந்தினை தூவுவதாக வாட்ஸ் அப்பில் வதந்திகள் பரவி வருவதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். உலகையே அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல நாடுகளும் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆனால், அரசாங்கங்களுக்கு சவால் விடும் வகையில் சமூக வலைத்தளங்களில் பலரும் வதந்திகளை பரப்பிக் கொண்டே இருக்கின்றனர். வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட, வதந்திகளை கட்டுப்படுத்த முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் விநோதமான முறையில் கொரோனா தொடர்பாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர். அதாவது, கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக கர்நாடக அரசு இரவில் வானில் இருந்து மருந்து தெளிக்கவுள்ளதாகவும், அதனால் பெங்களூரு நகரவாசிகள் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்ற தகவல்கள் வாட்ஸ் அப் போன்ற சமூகவலைதளங்களில் வதந்திகள் பரப்பப்படுகின்றன.



பெங்களூரில் பலருக்கும் இந்த தகவல் தீயாய் பரவியுள்ளது. அத்துடன், இந்தத் தகவலை நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலருக்கும் உடனடியாக ஷேர் செய்ய வேண்டும் என்றும் அந்த வாட்ஸ் அப் மெசேஜில் கூறியுள்ளனர்.

ஆனால், பெங்களூரு மாநகராட்சி இந்த தகவலை முற்றிலும் மறுத்து வதந்தியை கிளப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதுவரை கொரோனா பாதிப்புக்கு சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்ற நிலையில், இதுபோன்ற தவறான செய்தியால் பலரும் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர்.

இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘நாங்களும் அந்த பார்வேடு மெசேஜை பார்த்தோம். போலியான செய்தி.

சில பெங்களூரு நகரவாசிகள் ஒருவருக்கு ஒருவர் அனுப்பி பீதியை உருவாக்கி உள்ளனர். வீட்டிற்குள்ளே இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதனால், வெளியே போக வேண்டாம் என அர்த்தமில்லை.

வதந்தி மற்றும் பீதியைக் கிளப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

.

மூலக்கதை