ஈரான் சென்று திரும்பிய தந்தை மூலம் பரவியது; எல்லையில் இந்திய ராணுவ வீரருக்கு கொரோனா பாதிப்பு: புனேயில் மற்றொரு ராணுவ அதிகாரி, பெண் தனிமைப்படுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஈரான் சென்று திரும்பிய தந்தை மூலம் பரவியது; எல்லையில் இந்திய ராணுவ வீரருக்கு கொரோனா பாதிப்பு: புனேயில் மற்றொரு ராணுவ அதிகாரி, பெண் தனிமைப்படுத்தல்

புதுடெல்லி: ஈரான் சென்று திரும்பிய தந்தையின் மூலம் இந்திய ராணுவ வீரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அதேபோல், புனேயில் மற்றொரு ராணுவ அதிகாரி, பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யூனியன் பிரதேசமான லடாக்கில் பணியாற்றும் 34 வயதுடைய ராணுவ வீரர் ஒருவருக்கு கொேரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதன்முதலாக இந்திய ராணுவத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த ராணுவ வீரரின் தந்தை, புனித யாத்திரைக்காக ஈரானுக்குச் சென்றுவிட்டு கடந்த பிப்.

27ம் தேதி  ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா திரும்பினார். அவருக்கு ஏற்பட்ட நோய் தொற்றால், ராணுவ வீரருக்கும் கொேரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது ராணுவ வீரர் உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரரின் தந்தை, லடாக் ஹார்ட் அறக்கட்டளையில் தனிமைப்படுத்தப்பட்டார்.

பின்னர், மார்ச் 6ம் தேதி அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. மேலும் உள்ளூர் எஸ். என். எம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார்.

முன்னதாக ராணுவ வீரர் பிப். 25ம் ேததி முதல் மார்ச் 1ம் தேதி வரை சாதாரண விடுப்பில் இருந்தார்.

மார்ச் 2ம் தேதி மீண்டும் பணியில் சேர்ந்தார். வீரர் தனது விடுப்பில் இருந்து மீண்டும் பணியில் இணைந்திருந்தாலும், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் தனது குடும்பத்திற்கு உதவி செய்து வந்தாலும், அவரது சுச்சோட் கிராமத்தில் சிறிது காலம் தங்கியிருந்ததால், தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.



அவரது தந்தைக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், மார்ச் 7ம் தேதி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 16ம் தேதி ராணுவ வீரருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது நர்பூ மெமோரியல் எனப்படும் எஸ். என். எம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், ராணுவ வீரரின் சகோதரி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் சோனம் எஸ். என். எம் ஹார்ட் பவுண்டேஷன் மருத்துவமனையில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராணுவம் தனது பணியாளர்களுக்கான அனைத்து பயிற்சி வகுப்புகளையும் மார்ச் 23 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற பயிற்சி, மாநாடுகள் மற்றும் பணியாளர்களின் நடமாட்டத்தை ராணுவம் ரத்து செய்துள்ளது.

வீரர்களின் நலன் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிப்பால், சில அறிகுறிகள் காணப்பட்டதை அடுத்து புனேவில் உள்ள ராணுவ அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ராணுவ அதிகாரி மற்றும் ஒரு பெண் அவர்களாகவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், தேவைப்பட்டால் கொரோனா சோதனைகள் அவர்களுக்கு நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் வட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.



இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 140க்கும் மேல் உயர்ந்ததால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இந்த வார இறுதிக்குள் இரண்டு விரைவான சோதனை ஆய்வகங்கள் (உயர் செயல்திறன் அமைப்பு) மற்றும் 49 கூடுதல் சோதனை மையங்களை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை