கொரோனாவின் கொடூர முகங்கள்... உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனாவின் கொடூர முகங்கள்... உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

* 14 பில்லியன் டாலர் நிதி; விமான ஊழியருக்கு 20% சம்பளம் கட்
* பாஜக மாஜி அமைச்சருக்கு கொரோனா அறிகுறி
*  95 ரயில்கள் அதிரடி ரத்து; கேட்டரிங் ஊழியர்களுக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 14 பில்லியன் டாலர் நிதியை உலக வங்கி ஒதுக்கி உள்ளது.

விமானங்கள் இயங்காததால் விமான ஊழியருக்கு 20% சம்பளம் கட் செய்யப்பட்டுள்ளது. பாஜக மாஜி அமைச்சர், கொரோனா அறிகுறியால் தனிமைப்படுத்தப்பட்டார்.

நாடு முழுவதும் 95 ரயில்கள் அதிரடி ரத்து செய்யப்பட்டுள்ளன; கேட்டரிங் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், தற்போதுவரை 1,98,422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; இது இன்று 2 லட்சத்தை நெருங்கும் என்று கூறப்படுகிறது.

இதுவரை 7,987 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் புதிதாக 15,932 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 826 பேர் பலியானதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், சீனாவிற்கு அடுத்த இடத்தில் உள்ள இத்தாலியில், பாதிப்பு 31,506 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 2503ஐ தாண்டியுள்ளது. இத்தாலி முழுவதும் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது.



நேற்று ஒரே நாளில் சீனாவில் 11 பேர், இத்தாலியில் 345, ஈரானில் 135, ஜெர்மனியில் 191 பேர் என உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சர்வதேச அளவில் விமான இயக்கங்கள் முடங்கி கிடப்பதால், பெரும்பாலான விமான நிலையங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

கோ ஏர் விமான நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாமல் விடுப்பு வழங்குவதாகஅறிவித்துள்ளது. பல விமான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதியத்தைக் குறைத்துள்ளன.

பயணிகளின் போக்குவரத்து வருவாயில் இயல்புநிலை திரும்பும் இந்த நடவடிக்கைகள் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான சேவைகள் குறைக்கப்படுவதால் பெரும்பாலான பணியாளர்களுக்கு வேலை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில்  கொரோனா வைரஸ் காரணமாக இறப்பு எண்ணிக்கை 115ஐ எட்டியுள்ளது. கிட்டத்தட்ட 50 மாநிலங்களில் கொரோனா தாக்கம் இருப்பதால், உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோய்களின் எண்ணிக்கை 6,509ஐ தாண்டியது.



‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் கூற்றுப்படி, பெரும்பாலும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், 10க்கும் மேற்பட்ட நபர்கள் கூடியிருப்பதைத் தவிர்க்குமாறு அதிபர் டிரம்ப் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ‘நாங்கள் இதிலிருந்து விடுபட வேண்டும்; இந்த போரை (கொரோனா) நாங்கள் வெல்வோம்; அதுவும் மிக விரைவாக வெல்ல வேண்டும்” என்று இன்று டுவிட் செய்துள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ‘மனித உயிர் பாதுகாப்பு அவசரநிலை’ என்று அறிவித்து, நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அனைத்து வெளிநாட்டு பயணங்களையும் கைவிட வேண்டும்.

முறையான அறிவிப்பு, நகரங்கள் அல்லது பிராந்தியங்களை மூட வேண்டும். 100க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் எவ்வித கூட்டத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது.

முன் எப்பொழுதும் இல்லாத வகையில் ‘நிலை 4: பயணம் செய்யாதீர்கள்’ என்ற அவசர அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பல்வேறு நிறுவனங்களும் உலக நாடுகளுக்கு உதவுவதற்காக விரைவான நிதியுதவியின் அளவை 14 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

முன்னதாக ஆரம்ப தொகுப்பில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை அறிவித்தது. இந்த தொகுப்பு மூலம், பொது சுகாதாரம் மேம்படும்.

நோய் கட்டுப்படுத்துதல், நோயறிதல் மற்றும் சிகிச்சை உள்ளிட்டவை மற்றும் தனியார் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை நேற்று மகாராஷ்டிராவில் மூத்த குடிமகன் ஒருவர் பலியானதுடன் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 148 ஆகவும், தற்போது வரை புதியதாக 13 பேரும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம். பி-யுமான சுரேஷ் பிரபு, அடுத்த 14 நாட்களுக்கு தனது வீட்டில் தனிமையில் இருக்கிறார்.

மார்ச் 10ம் தேதி சவூதி அரேபியாவுக்கு அண்மையில் சென்றுவந்த பின், தற்போது அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நேற்று டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் திரையிடப்படுதல் சோதனை குறித்து ஆய்வு நடத்தினார்.

அனைத்து உத்தியோகபூர்வ அல்லது சர்வதேச பயணங்களையும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மேற்கொள்வது தொடர்பாக ஏற்கனவே திட்டமிட்ட அனைத்து பயணங்களுக்கும் தடை விதிப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்ெனச்சரிக்கை நடவடிக்கையாக, இந்திய ரயில்வே நிர்வாகம் 95 ரயில்களை ரத்து செய்தது.



காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் உள்ள எந்த ஊழியரும் இந்திய ரயில்வேயில் உணவு கையாளும் தொழிலில் ஈடுபடுத்தப்படக்கூடாது என்று கேட்டரிங் ஊழியர்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தியா மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சோதனைக் கொள்கையைக் கொண்டுள்ளதால், தொற்றுநோயின் தீவிரம் குறைந்து வருகிறது.

அனைத்து நாடுகளும் தங்கள் கொரோனா வைரஸ் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளது. தெலங்கானா போலீசார் ஐதராபாத்தில் உள்ள சுகாதார பொருட்கள் உற்பத்தி ஆலையில் நேற்றிரவு சோதனை செய்தனர்.

அப்போது, போலி சுகாதார உபகரணங்களையும், ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும், 180 அட்டைப்பெட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

அங்கு பணியாற்றிய 6 பேரையும் கைது செய்தனர்.

.

மூலக்கதை