கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிபோனது ‘கோபா’, ‘யூரோ’

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிபோனது ‘கோபா’, ‘யூரோ’

கொலம்பியா: கடந்தாண்டு பிரேசிலில் தென் அமெரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற 46வது ‘கோபா’ அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில் அணி ஒன்பதாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. தொடர்ந்து, 47வது தொடர் அர்ஜென்டினா, கொலம்பியாவில் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை நடப்பதாக இருந்தது.

நடப்பு சாம்பியன் பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கவிருந்தன. இதனிடையே, உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரசால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தென் அமெரிக்க கால்பந்து சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில்,  ‘கொரோனாவால் பொதுமக்கள், வீரர்கள் ஆகியோரின் நலன் கருதி இந்தத் தொடர்  அடுத்தாண்டு ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை நடைபெறும்’ எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேேபால், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான ‘யூரோ’ கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

16வது யூரோ கோப்பை தொடர் வரும் ஜூன் 12 முதல் தொடங்கி ஜூலை 12 வரை லண்டன், முனிச், ரோம் உள்ளிட்ட ஐரோப்பாவின் 12 நகரங்களில் நடைபெறவிருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், இந்தத் தொடர் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யூரோ கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அடுத்தாண்டு ஜூன் 11 முதல் ஜூலை 12 வரை போட்டி நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்கவுள்ளன.

.

மூலக்கதை