566 பேர் பாதிப்பு, 138 பேர் பலி எதிரொலி: மலேசியாவில் அவசரகால கட்டுப்பாடு அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
566 பேர் பாதிப்பு, 138 பேர் பலி எதிரொலி: மலேசியாவில் அவசரகால கட்டுப்பாடு அறிவிப்பு

கோலாலம்பூர்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்று உலகம் முழுவதும் பரவிய நிலையில் மலேசியாவில் இன்றைய நிலையில் 566 ேபர் பாதிக்கப்பட்டும், 138 பேர் பலியாகியும் உள்ளனர். இதனால், மலேசிய தலைநகர் கோலாலம்பூர் உட்பட முக்கிய நகரங்கள் முடங்கி உள்ளன.

இந்நிலையில், மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின், அந்நாட்டு தேசிய தொலைக்காட்சியில் நேற்றிரவு வெளியிட்ட அவசரகால அறிவிப்பில் கூறியதாவது: மலேசியாவில் நாளை (மார்ச் 18) முதல் இம்மாதம் 31ம் தேதி வரை தேசிய அளவில் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொறுமையாக இருந்து சவாலைச் சமாளிக்க வேண்டும். மக்கள் பதற்றப்பட வேண்டாம்.

சமயம், சமூகம், கலாசாரம் தொடர்பான நிகழ்வுகள் உள்ளிட்ட கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

வழிபாட்டுத் தலங்களும் வர்த்தக நிறுவனங்களும் மூடப்படும். பேரங்காடிகள், சந்தைகள், சிறிய சந்தைகள், பல்பொருள் அங்காடிக் கடைகள் இயங்கும்.

வெளிநாடுகளுக்கு செல்ல மலேசியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடுகளிலிருந்து மலேசியாவுக்குத் திரும்புவோர், சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுவதுடன் அவர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவர்.

வெளிநாட்டினர் மலேசியாவுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்படும்.

நீர், மின்சாரம், ஆற்றல், தொலைத்தொடர்பு, அஞ்சல் சேவைகள், போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஒலிபரப்பு, நிதி, வங்கி, சுகாதாரம், மருத்துவம், தீயணைப்பு, சிறைகள், துறைமுகம், பாதுகாப்பு, தற்காப்பு, துப்புரவு, உணவு வழங்கல் உட்பட இன்றியமையாச் சேவைகள் தவிர மற்ற அரசாங்க, தனியார் வளாகங்கள் மூடப்படும்.

.

மூலக்கதை