சீனாவில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்த நிலையில் ஐரோப்பாவை மையம் கொண்டது கொரோனா வைரஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சீனாவில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்த நிலையில் ஐரோப்பாவை மையம் கொண்டது கொரோனா வைரஸ்

*இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பெரும் பீதி
*உலகெங்கும் 1. 45 லட்சம் பேர் பாதிப்பு; ஒரேநாளில் 436 பேர் பலி

புதுடெல்லி: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்த நிலையில், தற்போது வைரஸ் பரவல் ஐரோப்பாவை மையம்கொண்டுள்ளது. அதனால், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

உலகெங்கும் 1. 45 லட்சம் பேர் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்த நிலையில், நேற்று ஓரேநாளில் 436 பேர் பலியாகி உள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவதால், இதுவரை 82 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவர்களில் நேற்று மட்டும் 8 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்த 10 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதற்கிடையே ஏற்கனவே கர்நாடகாவில் முதியவர் ஒருவர் கொரோனா வைரசால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் நேற்று டெல்லியில் 69 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா வைரசால் உயிரிழந்திருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளிகளுக்கு விடுமுறை, திரையரங்குகள் மூடல், கோயில்களுக்கு நோய் பாதிப்பு உள்ள பக்தர்கள் வர வேண்டாம் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் போட்டிகள் ரத்து, கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் ட்யூன் உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில், ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால், குறைந்தது மூன்று வாரங்களாவது (ஏப்ரல் 12 வரை) வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகளவில் இன்று காலை நிலவரப்படி 1,45,455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதியதாக 10,878 பேர் நோய் அறிகுறியுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 5,418 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் ஒரே நாளில் 436 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 80,824 ஆகவும், பலி எண்ணிக்கை 3,177 ஆகவும் தொடர்கிறது.

அதற்கு அடுத்த இடத்தில் இத்தாலி (இதுவரை 1,266 பேர் பலி), ஈரான் (514 பலி), தென் கொரியா (71 பலி), ஸ்பெயின் (133 பலி), அமெரிக்கா (48) என்ற நிலையில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், ‘‘இப்போது ஐரோப்பிய நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மையமாக மாறியுள்ளது. இது ஒரு துயரமான மைல்கல்.

மத்திய சீன நகரமான வுஹானில் டிசம்பரில் வைரஸ் பரவலை தொடர்ந்து, 123 நாடுகளில் 1,45,000க்கும் மேற்பட்ட மக்கள் வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்’ என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள பிரேசிலின் தூதர் சார்ஜ் டி அபைர்ஸ், கொரோனா வைரஸ் பாதிப்பால் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தன்னை தனிமைபடுத்திக் கொண்டதாக பிேரசில் அரசு தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்கு அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளார். அவரது குழந்தைகள் வழக்கம் போல் மாளிகையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

தனிமைபடுத்தப்பட்ட பிரதமரின் மனைவி, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அதிக நேரம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வழக்கம்போல், தனது வீட்டில் இருந்தபடியே அலுவல் வேலையை கவனித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன். எனக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை.

நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். தொழில்நுட்ப வசதிகள் இருப்பதால், நான் வீட்டிலிருந்து வேலை செய்கிறேன்’ என்றார்.

'அமெரிக்கா விசா நிறுத்தம்'
இந்தியாவில் உள்ள தூதரகங்களில் விசா வழங்கும் நடைமுறைகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா அவசர நிலையை அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விசா வழங்கும் முறை மார்ச் 16ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக சோதனை மற்றும் தொழிலாளர்களுக்கு நோய்வாய்ப்பட்ட விடுப்பு வழங்கும் ஓர் அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளார். அதனால், அனைத்து குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் ஒன்றிணைந்து வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

'கொரோனா பாதிப்பு ஹைலைட்ஸ்'
* இந்தோ-பங்களாதேஷ் இடையிலான ரயில் பயணிகள் போக்குவரத்து மார்ச் 15 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
* இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்திய பிரதமர் மோடியிடம் முக கவசம் மற்றும் மருந்து மூலப்பொருட்களை தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால், மத்திய அரசின் தரப்பில் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மருந்து பொருட்களின் ஏற்றுமதியை நிறுத்த இந்தியா முடிவு செய்தது.

இதற்கிைடயே, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்த கோரிக்கையை விடுத்ததாக இஸ்ரேலின் சேனல் 13 செய்தி வெளியிட்டுள்ளது.
* ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா உட்பட 12 நாடுகளுக்கு சவூதி அரேபியா தனது பயணத் தடையை நீட்டித்துள்ளது.

அந்நாடு வெளியிட்ட அறிக்கையில், “சவுதி அரேபிய மக்கள் வெளிநாடுகளுக்கு தங்கள் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.   ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும், சுவிட்சர்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், சூடான், எத்தியோப்பியா, தெற்கு சூடான், எரித்திரியா, கென்யா, ஜிபூட்டி மற்றும் சோமாலியா போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டாம்.

இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களில் 11 பேர் வெளிநாட்டினர் சவுதியில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ. ஐ. டி) அனைத்து கல்வி, இணை பாடத்திட்டங்கள் வகுப்புகளை தொடர வேண்டாம் என்றும், மார்ச் 15ம் தேதி நள்ளிரவுக்குள் மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேறுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டது.

.

மூலக்கதை