கனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா; உலகளவில் 1.34 லட்சம் பேர் பாதிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா; உலகளவில் 1.34 லட்சம் பேர் பாதிப்பு

ஒட்டாவா: உலகளவில் இன்றைய நிலையில் கிட்டத்தட்ட 1. 34 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், கனடா பிரதமரின் மனைவிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா உலக நாடுகள் அனைத்தையும் கடும் அச்சத்திலும், பதற்றத்திலும் வைத்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 120க்கும் மே‌ற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த விவகாரத்தை மிகவும் கவனத்துடன் அணுகுமாறு அனைத்து நாடுகளையும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.



உலகெங்கிலும் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோயால் தற்போதைய நிலவரப்படி 1,34,670க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நேற்று மட்டும் 8,456 பேருக்கு புதியதாக வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதேபோல் உலகளவில் இதுவரை 4,973 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 345 பேர் இறந்துள்ளனர்.

முதலில் வைரஸ் பரவிய சீனாவில் மட்டும் 80,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 3,170 பேர் பலியானதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் உள்ள இத்தாலியில் 15,113 பேர் பாதிக்கப்பட்டும் 1,016 பேர் பலியாகியும் உள்ளனர்.

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி சோபிக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரிட்டனில் இருந்து திரும்பிய சோபிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும், இதனால் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் ட்ரூடோ கூறியுள்ளார்.

மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக கூறியுள்ள ட்ரூடோ, அதுவரை வீட்டில் இருந்தே தனது அரசமுறை பணிகளை தொடர திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை