35 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் ஜோதி நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு தடை: கொரோனா பீதியால் அதிரடி முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
35 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் ஜோதி நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு தடை: கொரோனா பீதியால் அதிரடி முடிவு

டோக்கியோ: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 24ம் தேதி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் கோலாகலமாக தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி பாரம்பரிய முறைப்படி நாளை மறுநாள் (மார்ச் 12) கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியா கிராமத்தில் ஏற்றப்பட உள்ளது.

இந்த ஜோதியை முதலில் கைகளில் ஏந்தும் நபராக கிரீஸ் நாட்டின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான அனா கோரகாக்கியை ஹெலெனிக் ஒலிம்பிக் குழு தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், பாரம்பரிய ஒலிம்பிக் ஜோதி நிகழ்ச்சியை, கொரோனா பீதியால் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த ஒலிம்பிக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கடந்த 35 ஆண்டுகளில் முதல் முறையாக பார்வையாளர் இல்லாமல் ஒலிம்பிக் ஜோதி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதற்காக புதன்கிழமை நடைபெறும் ஆடை ஒத்திகை மற்றும் வியாழக்கிழமை நடைபெறும் ஜோதி விழா ஆகிய இரண்டிலிருந்தும் பார்வையாளர்கள் விலக்கப்படுவார்கள் என்று ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு முதல் தடவையாக பெலோபொனேசிய குக்கிராமத்தில் உள்ள புல்வெளி சரிவுகளின் மத்தியில், பார்வையாளர்களும் இல்லாமல் விழா நடைபெறும். பொதுவாக கிரேக்கர்கள் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் உட்பட பல ஆயிரம் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், 100 அழைக்கப்பட்ட மற்றும் அங்கீகாரம் பெற்ற விருந்தினர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை